பெருந்தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு தலா 10 பேர்ச் காணிகளை வழங்க அமைச்சரவைப்பத்திரம் - News View

About Us

About Us

Breaking

Friday, September 22, 2023

பெருந்தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு தலா 10 பேர்ச் காணிகளை வழங்க அமைச்சரவைப்பத்திரம்

தனியார் பெருந்தோட்டக் கம்பனிகளில் பயன்படுத்தப்படாதிருக்கும் காணிகளை பொதுச் செற்பாடுகளுக்குப் பெற்றுக் கொள்வது தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள சட்டவரைபை விரைவுபடுத்துவது குறித்து ஆளும், கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர் ஒன்றிணைந்து ஜனாதிபதியிடம் கலந்துரையாட வேண்டும் என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் அண்மையில் அவரது தலைமையில் நடைபெற்ற பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பெருந்தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டமையால் அவற்றின் கீழ் பயன்படுத்தப்படாதுள்ள பல ஏக்கர் காணிகளைப் பொதுச் செற்பாடுகளுக்குக் கூடப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது. இதனைப் பெற்றுக் கொள்வது குறித்து கடந்த அரசாங்கத்தின் காலத்தில் சட்டவரைபொன்றைத் தயாரிக்கும் பொறுப்பு சட்டவரைஞர் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் நினைவுபடுத்தினார். இதனைத் துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது.

அத்துடன், பெருந்தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களுக்குத் தலா 10 பேர்ச் காணிகளை வழங்குவது தொடர்பில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் காணி அமைச்சு ஆகியன இணைந்து, கூட்டாக அமைச்சரவைப் பத்திரமொன்றைச் சமர்ப்பிக்கவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பெருந்தோட்டத்துறையில் உள்ள ஏறத்தாழ 250,000 தொழிலாளர் குடும்பங்களில் ஏற்கனவே ஏறத்தாழ 60,000 குடும்பங்களுக்குக் காணி உரிமைகள் வழங்கப்பட்டிருப்பதாகக் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இதற்கமைய எஞ்சிய குடும்பங்களுக்கான காணிகளைப் பெற்றுக்கொடுக்க 5000 ஹெக்டெயர் காணி தேவைப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அரசுக்குச் சொந்தமான பெருந்தோட்டங்களில் காணப்படும் காணிகளில் விசேட செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டு வருவதாகவும், ஒரு சில இடங்களில் காணப்படும் குறைபாடுகளை விரைவில் நிவர்த்தி செய்து கொடுக்குமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்த, அரவிந்த குமார், பாராளுமன்ற உறுப்பினர்களான கயந்த கருணாதிலக, மஹிந்தானந்த அளுத்கமகே, வீ.இராதாகிருஷ்ணன், சுஜித் சஞ்சய பெரேரா, ரோஹினி கவிரத்ன, கயாஷான் நவநந்த, எம்.ராமேஸ்வரன், குணதிலக ராஜபக்ஷ, உபுல் மகேந்திர ராஜபக்ஷ, உதயகாந்த குணதிலக, சம்பத் அத்துகோரல, பிரேம்நாத் சி.தொலவத்த, உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment