நிலந்த ஜயவர்தனவின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்று தவறாக குறிப்பிட்டதை திருத்திக் கொள்கிறேன் - டிரான் அலஸ் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 21, 2023

நிலந்த ஜயவர்தனவின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்று தவறாக குறிப்பிட்டதை திருத்திக் கொள்கிறேன் - டிரான் அலஸ்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனவின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்று தவறாக குறிப்பிட்டதை திருத்திக் கொள்கிறேன் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்ற அமர்வின்போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி செவ்வாய்க்கிழமை (19) வாய் மூல விடைக்கான வினாக்களின்போது உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சமர்ப்பித்த அறிக்கையில் பொலிஸ் அதிகாரிகளின் பெயர் ஏதும் குறிப்பிடப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார்.

அறிக்கையில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதா என அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு நான் அறிக்கையில் நிலந்த ஜயவர்தனவின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்று பதிலளித்தேன். இதனை நான் திருத்திக் கொள்கிறேன். அத்துடன் தவறான விடயத்தை குறிப்பிட்டதையிட்டு கவலையடைகிறேன். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்கிறேன்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு பரிந்துரைக்கப்படவில்லை. நிலந்த ஜயவர்தன மீது குற்றச்சாட்டுக்கள் ஏதும் உள்ளதா என்பதை பரிசீலனை செய்யுமாறு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உண்மையை ஏற்றுக் கொண்டுள்ளது மகிழ்ச்சிக்குரியது. ஆனால் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு பரிந்துரைக்கப்படவில்லை என்று குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மீண்டும் அறிக்கையை முழுமையாக ஆராயுங்கள் என்றார்.

No comments:

Post a Comment