(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)
நாட்டை வங்குரோத்தடையச் செய்ய உறுதுணையாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத் தொடருக்கு அழைத்துச் சென்றுள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது பொதுமக்களின் பணத்தை வீணடிக்கும் செயலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாடு வங்குரோத்தடைந்துள்ள நிலையில், மக்களின் வாழ்வாதாரம், வியாபார நடவடிக்கைகள் சீரழிந்துள்ள இவ்வேளையில், நாட்டை வங்குரோத்தடையச் செய்ய உறுதுணையாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத் தொடருக்குச் செல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஜனாதிபதி அந்த மாநாட்டுக்கு செல்லும்போது மிகவும் அவசியமான அதிகாரிகளை கூட்டிச் சென்றால் பரவாயில்லை. ஆனால் நாடு வங்குரோத்தாகுவதற்கு காரணமானவர்களை அழைத்துச் செல்வது பொதுமக்களின் பணத்தை வீணடிக்கும் செயலாகும். ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு பாய்ந்தவர்களை சந்தோஷப்படுத்துவதற்காகவே அவர்களை அழைத்துச் சென்றுள்ளார்.
நாட்டு மக்கள் அரசாங்கத்திற்கு வரியாக வழங்கும் நிதி இவ்வாறு எவரையும் சந்தோஷப்படுத்துவதற்காக ஏன் பயன்படுத்தப்படுகிறது என கேட்கிறோம் என்றார்.
இதன்போது எழுந்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிக்கையில், நாடு வங்குரோத்து அடைந்ததாக இப்போது தெரிவிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தந்தையான ரணசிங்க பிரேமதாச நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளார். அதன் பின்னர் அமைச்சராக சஜித் பிரேமதாசவும் பல ஆண்டு காலம் பதவி வகித்துள்ளார். அவர்களும் இதற்குப் பொறுப்புக்கூற வேண்டும்.
அதனை விட்டுவிட்டு எதிர்க்கட்சித் தலைவர் இப்போது பொதுஜன பெரமுன உறுப்பினர்களை குறை கூறுவது எந்த விதத்திலும் ஏற்க முடியாது. அத்துடன் பொதுஜன பெரமுன கட்சி அண்மையில் உருவான கட்சி என்பதையும் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment