நாட்டு மக்களின் வரிப் பணத்தை செலவிட்டு கொள்வனவு செய்யப்பட்டுள்ள கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான மருந்துகள், உபயோகிக்கப்படாமல் விரயமாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக கடந்த வருடம் கொள்வனவு செய்யப்பட்டிருந்த 14.5 மில்லியன் பைசர் தடுப்பூசியில், 13 வீதமான தடுப்பூசிகளே உபயோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும் காலாவதியானதால் மீதமான அனைத்தையும் அழிப்பதற்கு நடவடிக்கை எடுத்ததாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் விளக்கமளித்த அமைச்சர், சளி உள்ளிட்ட சுவாச நோய் சம்பந்தமான மருந்துகள் தேவையான அளவில் மதிப்பிடப்பட்டு இதற்கான “ஓடர்கள்” முன்னெடுக்கப்பட்டன.
கொரோனா காலத்தில் முகக்கவசம் அணிதல், கைகளைக் கழுவுதல், சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுதல் போன்ற வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன. இதனால், சுவாச நோய் சம்பந்தமாக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ள வருகை தரும் நோயாளர்களின் எண்ணிக்கை, கடந்த வருடத்தில் குறிப்பிடத்தக்களவு குறைந்தது. இதனால், கொள்வனவு செய்யப்பட்டிருந்த 80 வீதமான மருந்துகள் உபயோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் அகற்றப்பட்டன.
முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட மருத்துவக் குழு 20 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது அவசியம் என்ற தீர்மானத்தை மேற்கொண்டது. இதனால், 14.5 மில்லியன் பைசர் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்டது.
கொவிட் நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர், மக்கள் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதில் பின்வாங்கினர். அதனாலேயே தடுப்பூசிகள் மீதமானதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)
No comments:
Post a Comment