நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததால் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடுவது நிறுத்தப்பட்ட நிலையில், 30 ற்கும் - 40 ற்கும் இடைப்பட்ட முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பில் மீண்டும் ஒப்பந்தங்களை கைச்சாத்திடுவதற்கு முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். நாடு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதில் நம்பிக்கை கொண்டுள்ள இவர்கள், மீள இதற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர், நாட்டில் எதிர்வரும் காலங்களில் மேலும் 250 க்கும் 280 க்கும் இடைப்பட்ட மில்லியன் ரூபா பெறுமதியான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.
முதலீட்டுச் சபை ஒரு பில்லியனை இலக்காகக் கொண்ட முதலீடுகளை மேற்கொள்வதற்கான இலக்கை, இவ்வருடத்தில் அரசாங்கம் பெற்றுக் கொடுத்துள்ளது.
இதனை இரண்டு பில்லியன் வரை முன்னெடுத்துச் செல்வதே நோக்கமாகும். இதுவரை 701 மில்லியன் முதலீட்டு இலக்கை நிறைவு செய்ய முடிந்துள்ளது. இந்த முதலீடு மூலமான நிதி நாட்டுக்கு கிடைத்துள்ளது.
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததோடு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்த திட்டங்களை முதலீட்டாளர்கள் கைவிட்டிருந்தனர். தற்போது நாடு இயல்பு நிலைக்கு திரும்புவது தொடர்பில் நம்பிக்கை கொண்டுள்ள முதலீட்டாளர்களே மீண்டும் முதலிடுவதற்கான தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளனர்.
நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டமானது, முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வருவதற்கு நேரடியான வழிவகைகளை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில், தற்போது அதிகரித்து வரும் படுகொலைகளை விரைவாக கட்டுப்படுத்தாவிட்டால், வெளிநாட்டு முதலீடுகள் பெரிதளவில் பாதிக்கப்படும்.
கொழும்பு துறைமுக நகரத்தை முதலீட்டாளர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் வேலைத்திட்டம் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் தலைமையில் நேற்றையதினம் அபுதாபி மற்றும் டுபாய் நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அந்நாடுகளில் முதலீட்டு மாநாடுகள் முன்னெடுக்கப்பட்டு அவர்களும் இந்தத் திட்டத்திற்கு அழைக்கப்படவுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் துறைமுக நகரத்தில் தமது பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும் அதற்கு தேவையான சட்ட வரைபுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)
No comments:
Post a Comment