முல்லைத்தீவு - கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழி முழுமையாக அகழ்ந்து, ஆய்வு செய்யப்பட்டு உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டுமென முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு உண்மைகள் வெளிக்கொணரத் தவறினால் மக்கள் போராட்டத்தில் குதிக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வாய்வுகள் ஒன்பது நாட்கள் இடம்பெற்ற நிலையில்,15.09.2023 நேற்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஒக்ரோபர் மாத மூன்றாவது வாரத்தில் அகழ்வாய்வுகள் மீளவும் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் கடந்த ஒன்பது நாட்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தநிலையில், 17 மனித எலும்புக் கூட்டத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், இன்னும் பல மனித எலும்புக் கூடுகள் அங்கே இருப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
இந்நிலையில் ஒன்பது நாட்கள் அகழ்வாய்வுகள் இடம்பெற்றதையடுத்து, குறித்த அகழ்வாய்வுப் பணிகள் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனிதப் புதைகுழியை ஆய்வு செய்த தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர், ஏற்கனவே திட்டமிட்டிருந்த வேறு பணிக்காக செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் இந்த மனிதப் புதைகுழி முற்று முழுதாக அகழ்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், இந்த மனிதப் புதைகுழி தொடர்பான உண்மைத் தன்மை வெளிவர வேண்டும் என்பதே எமது நிலைப்பாடகவிருக்கின்றது.
அத்தோடு சர்வதேச நாடுகள் இந்த மனிதப் புதைகுழி தொடர்பான விடயத்தில் தலையிட்டு, இந்த மனிதப் புதைகுழி விவகாரத்தில் இலங்கை அரசின் பொறுப்புக் கூறலுக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.
குறிப்பாக தற்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தமது உறவுகளைத் தேடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இறுதிக்கட்டப் போர் இடம்பெற்றபோது இராணுவத்திடம் சரணடைந்து, தற்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களாகத் தேடப்படுபவர்கள், குறித்த கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழியில் எலும்புக் கூடுகளாக இருக்கலாம் என இங்குள்ள பலருக்கும் சந்தேகங்கள் இருக்கின்றன.
இப்படியான சூழலில் இங்கு அகழ்வாய்வு மேற்கொள்பவர்களை நாம் நம்புகின்றோம். இந்த அகழ்வாய்வுகளில் உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும். அவ்வாறு உண்மைகள் வெளிக்கொணரத் தவறும் பட்சத்தில் மக்கள் திரண்டு போராட்டங்களை நடாத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்றார்.
No comments:
Post a Comment