ரயில்வே தொழிற்சங்க பிரமுகரான இந்திக்க தொடங்கொட தமக்கு எதிராக முன்வைத்துள்ள அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில், உச்சளவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக போக்குவரத்து ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ரயில்வே திணைக்கள தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகளுடனான விசேட பேச்சு வார்த்தையின்போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், போக்குவரத்து துறையில் முன்னேற்றகரமான பல்வேறு செயற்திட்டங்களை நான் முன்னெடுத்துள்ளேன்.
பாராளுமன்றத்திற்கு தெரிவான பின்னர் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எனது பாராளுமன்ற உறுப்பினர் சம்பளத்தை நான் பெற்றுக் கொண்டதில்லை. அந்த நிதியை நான் ‘எமக்காக நாம்’ நிதியத்திற்கு அன்பளிப்பு செய்து வருகின்றேன்.
அத்துடன் ஒருபோதும் நான் அரசாங்கத்திடமிருந்து மின் கட்டணம், நீர்க் கட்டணம், மற்றும் உத்தியோகபூர்வ இல்லத்தையும் பெற்றுக் கொண்டதில்லை.
போக்குவரத்து அமைச்சரான நான், கடந்த ஒரு வருடம் மற்றும் நான்கு மாத காலங்கள் நான் ரயில்வே திணைக்களத்தின் முன்னேற்றத்திற்காக பல சிறந்த செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளேன். அந்த திணைக்களத்துக்காக அதிகமான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்த அமைச்சர் நானாவேன்.
ரயில்வே திணைக்களத்தின் காணி பிரச்சனைகள் ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கவும் வெற்றிடங்களை நிரப்புதல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் நான், முன்னெடுத்துள்ளேன்.
பிரதி வாரமும் ரயில்வே பொது முகாமையாளர் மற்றும் அதிகாரிகளை அழைத்து நிறுவனங்களில் நிலவும் பிரச்சனைகள் தொடர்பில், பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றேன்.
நாட்டு மக்களின் பெரும்பாலானவர்கள் ரயில்வே திணைக்களத்தை தனியார் மயப்படுத்துவதையே விரும்புகின்றனர். அந்த வகையில் தற்போது ரயில்வே திணைக்களத்தின் செலவுகள் குறைக்கப்பட்டு வருமானத்திலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment