வறட்சியினால் மின்சார உற்பத்திக்கான செலவு அதிகரித்துள்ள நிலையில், செலவின சீர்திருத்தக் கட்டணங்களை உடனடியாக மீளாய்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையினால் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணக் குறைப்பினால் தற்போதும் இலங்கை மின்சார சபை 33 பில்லியன் ரூபா நட்டத்துடன், பெரும் நட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக சபையின் பொது முகாமையாளர் ஆணைக்குழுவிற்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
வறட்சியினால் நீர் மின் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் கடந்த 7ஆம் திகதி வெளியிட்ட முன்னறிவிப்பிற்கமைய, இந்த நிலைமை ஒக்டோபர் மாதம் வரை நீடிக்கலாம் என மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனவரி முதல் ஜூலை இறுதி வரை நாளொன்றுக்கு 44.16 ஜிகாவாட் மணி நேரமாக இருந்த மின்சாரத் தேவை ஆகஸ்ட் மாதத்தில் 48.61 ஆக அதிகரித்துள்ளதாகவும் மின்சார சபை கூறியுள்ளது.
இதன் பின்னணியில், அனல் மின் உற்பத்திக்கு அதிக செலவு செய்ய வேண்டியுள்ளதாக அதன் பொது முகாமையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கக் கொள்கைக்கு அமைய மின்சாரக் கட்டணங்கள் உற்பத்தி செலவிற்குப் பொருந்த வேண்டும் என்பதால், கொள்கை வழிகாட்டுதலின் கீழ் அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கடிதத்தின் ஊடாக கட்டணத்தை அதிகரிக்குமாறு கூறிவில்லையெனவும் தமது அசௌகரியத்தை தெரிவித்துள்ளதாகவும் மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
கட்டண உயர்வு குறித்து ஆணைக்குழுவே தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், அடுத்த வருடம் ஜனவரி மாதம் வரை மின் கட்டண திருத்தம் இடம்பெறாது என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கடந்த 6 ஆம் திகதி அறிவித்தார்.
ஆனால், அமைச்சரின் குறித்த அறிக்கையின் பின்னர் மழையின் அளவு முற்றிலும் மாறிவிட்டதாக மின்சார சபை தற்போது கூறுகிறது.
ஆகஸ்ட் மாதம் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை என்றும், செப்டம்பர், ஒக்டோபர் மாதங்களில் மழை பெய்யாவிட்டால், அனல் மின்சாரத்தையே நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment