சிவில் பாதுகாப்பு படையணியை நவீனமயப்படுத்துவதன் மூலம் வினைத்திறனான சேவையை பெற நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு இராஜாங்க அமைச்சரின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்தப் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலைவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காணப்படுகிறார்.
சிவில் பாதுகாப்பு படையணி தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், யானை - மனித மோதலை தீர்ப்பதற்கு சிவில் பாதுகாப்பு படையினரின் உயர்ந்த பங்களிப்பு வழங்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். அத்துடன், இந்த அதிகாரிகளுக்குத் தேவையான எரிபொருள் வசதிகள் மற்றும் ஏனைய வசதிகள் வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், காடுகளுக்குத் தீ வைத்தல் அண்மைக்காலமாக பாரியளவில் இடம்பெற்றுவருவதாகவும் அவற்றை நிறுத்துவதற்கு வேலைத்திட்டமொன்றை ஆரம்பிப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
மேலும், கொத்தலாவல பாதுகாப்புப் பீடம் மற்றும் வைத்தியசாலை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்தக் குழுக் கூட்டத்தில் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான புத்திக பதிரன, கின்ஸ் நெல்சன், (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட, சஞ்சீவ எதிரிமான்ன, இசுறு தொடங்கொட, சஹன் பிரதீப் விதான, பிரேம்நாத் சி. தொலவத்த மற்றும் உபுல் மஹேந்திர ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment