(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
ஆட்சிக் கதிரையில் ஏற வேண்டும் என்பதற்காகவே ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதே ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது செனல் 4 வெளியிட்டிருக்கும் புதிய காணொளி தொடர்பாக சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜனாதிபதியை கேட்டுக் கொள்கிறோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்ற ஆயுள்வேதம் (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஈஸ்டர் தாக்குதல் தேர்தலை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டது என தற்போது செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன.
தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு அப்பாவிகளை கைது செய்தார்கள். அப்பாவிகளின் சொத்துக்களை சூரையடித்தார்கள்.
ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் சந்தேக கண்கொண்டு பார்க்கும் வகையில் தலைகுனிய வைத்தார்கள்.
மினுவங்கொடை முதல் குருணாகலை வரை பள்ளிவாசல்கள், முஸ்லிம்களின் வீடுகள் வியாபார நிலையங்கள் பலவற்றை அடித்து நொறுக்கினார்கள். அடுத்து ஆட்சிக்கு வர எதிர்பார்த்திருந்த கூட்டமே இதனை செய்தார்கள்.
மேலும் பெளசுல் அமீர் என்பவரை அவரது 4 பிள்ளைகள் பார்துக் கொண்டிருக்கையில் அசிட் அடித்து கொலை செய்தார்கள்.
அதேபோன்று என்னை உட்பட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், அஸாத் சாலி, ஜமாதே இஸ்லாமி அமைப்பின் தலைவர் என ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்களை சிறையில் அடைத்தார்கள்.
கவிதை எழுதியதற்காக அஹ்னாப் என்ற மாணவன் இன்று சர்வதேச பயங்கரவாத பட்டியலில் பெயரிடப்பட்டிருக்கிறது.
குற்றப் புலனாய்வு அதிகாரிகளின் நடவடிக்கையாலே இது இடம்பெற்றுள்ளது. இவ்வாறு பல இளைஞர்களின் வாழ்க்கை நாசமாக்கப்பட்டிருக்கிறது.
மேலும் ஆட்சிக் கதிரை ஏற வேண்டும் என்பதற்காகவே இந்த தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என இன்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்த அநியாயங்களை செய்து ஆட்சி பீடம் ஏறியவர்கள் இரண்டு வருடங்கள் கூட ஆட்சி செய்ய முடியாமல் போனது.
ஆளும் கட்சி உறுப்பினரான விவசாயத்துறை நாசம் செய்த முன்னாள் அமைச்சர் அனைத்து விடயங்களையும் கோத்தாபய ராஜபக்ஷ்வின் மீது சுமத்திவிட்டு சென்றார். முஸ்லிம்களின் மனம் நோகும் வகையில் பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வந்தார்.
மேலும் இந்த நாட்டிலே அமைதியை விரும்பி வாழ்ந்து வந்த முஸ்லிம் சமுதாயத்தின் மீது சாபக்கேட்டை உருவாக்கிய கூட்டம்தான் இந்த ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துக்கு பின்னால் இருந்தார்கள் என்ற செய்தியை சனர் 4 ஊடகம் நேற்று சர்வதேசத்துக்கு தெரிவித்திருக்கிறது.
அது மாத்திரமல்லாது, சகல இன மக்களுடன் நல்லமுறையில் வாழ்ந்து வந்த முஸ்லிம் சமூகம் தொடர்பான நல்லெண்ணத்தை நாசமாக்கிய இவர்கள் ஒருபோதும் உறுப்பட மாட்டார்கள்.
அதனால் ஈஸ்டர் தாக்குதல் காரணமாக 300 க்கும் மேற்பட்ட அப்பாவி உயிர்கள் பலியாகி இருக்கின்றன. பலர் ஊனமுற்று இருக்கின்றனர்.
இன்னும் பலர் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். எனவே அப்பாவிகளை விடுதலை செய்து, இந்த தாக்குதலின் சூத்திரதாரிகளை கண்டுபிடிப்பதற்காக சர்வதேச விசாரணை ஒன்றுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியை கேட்டுக் கொள்கிறோம்.
தற்போது பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவில் இருப்பவர்களை வைத்துக் கொண்டு இந்த தாக்குதல் தொடர்பான விசாரணை மேற்கொள்ள முடியாது.
வேலியே பயிரை மேய்ந்த கதையாக இருக்கின்ற காரணத்தினால் சர்வதேச விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
No comments:
Post a Comment