(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பயங்கரவாதி சஹ்ரான் உட்பட அடிப்படைவாதிகள் அல்லாவுக்காக உயிர் தியாகம் செய்தார்களே தவிர தென்னிலங்கையில் சிங்கள அரச தலைவரை உருவாக்குவதற்கல்ல. ஐ.எஸ். ஐ.எஸ். பயிற்சியாளர்கள் தொடர்பில் விஜயதாஸ ராஜபக்ஷ குறிப்பிட்ட கருத்துக்கு விசேட கவனம் செலுத்தியிருந்தால் குண்டுத் தாக்குதலை தடுத்திருக்கலாம். நல்லாட்சி அரசாங்கம் பொறுப்புடன் செயற்படவில்லை. ஆகவே ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலுக்கு நல்லாட்சி அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (5) இடம்பெற்ற ஆயுர்வேதம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, தென்னிலங்கையில் சிங்கள பௌத்த அரச தலைவரை உருவாக்குவதற்காக 09 முஸ்லிம் அடிப்படைவாதிகள் தற்கொலை குண்டுதாரிகளாக மாறினார்கள் என்று குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
சனல் 4 இலங்கை தொடர்பில் பொய்யான தகவல்களை வெளியிடுவது ஒன்றும் இது முதல் தடவையும் அல்லது இறுதியும் அல்ல, சனல் 4 இலங்கை தொடர்பில் 2011, 2012 மற்றும் 2013 ஆகிய காலப்பகுதிகளில் வெளியிட்ட பல காணொளிகள் பொய்யானது என்பதை நான் ஜெனிவாவில் உறுதிப்படுத்தினேன்.
சனல் 04 இலங்கை தொடர்பில் தற்போது வெளியிட்டுள்ள காணொளியை அவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வெளியிட தீர்மானித்திருந்தார்கள். அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதை தொடர்ந்து அந்த தீர்மானம் பிற்போடப்பட்டது.
ஜெனிவா கூட்டத் தொடர் எதிர்வரும் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை தொடர்பில் பொய்யான ஒரு காணொளியை சனல் 4 தற்போது வெளியிட்டுள்ளது. சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு இவ்விடயம் சிறந்த வாய்ப்பாக காணப்படுகிறது. ஆகவே வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் இவ்விடயம் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும்.
அன்ஷிப் அசாத் மௌலானா என்ற நபர் டி.எம்.பி.பி அமைப்பின் ஊடக செயலாளராக பதவி வகித்த நிலையில் 700 மில்லியன் ரூபா மோசடி செய்து அதனை தொடர்ந்து இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். தற்போது குறுகிய சுயநல நோக்கத்துக்காக செயற்படுகிறார்.
இதன்போது குறுக்கிட்டு கேள்வி எழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம், ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதன் பின்னணியில்தான் நீங்கள் (சரத் வீரசேகரவை நோக்கி) ஆட்சிக்கு வந்தீர்கள்.
ஆட்சிக்கு வந்தவுடன் குற்றவாளிகளை கண்டுப்பிடிப்பதாகவும், சட்டத்தின் முன் நிறுத்துவதாகவும் குறிப்பிட்டீர்கள். மக்களுக்கு வாக்குறுதி வழங்கினீர்கள். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியிருந்தால் இவ்வாறு காணொளிகள் தற்போது வெளியாகியிருக்காது. ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் விவகாரத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற தோல்வியடைந்துள்ளீர்கள் என்றார்.
இதற்கு பதிலளித்த சரத் வீரசேகர, ஏப்ரல் 21 குண்டுத் குதாக்குதலுக்கு நீங்கள் (கபீர் ஹசீமை நோக்கி) பதவி வகித்த நல்லாட்சி அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும். பயங்கரவாதி சஹ்ரான் அடிப்படைவாத செயற்பாடுகளில் ஈடுபடுகிறார் என புலனாய்வு பிரிவினர் அறிவித்தும் அரசியல் காரணிகளால் சஹ்ரான் கைது செய்யப்படவில்லை.
நல்லாட்சி அரசாங்கத்தில் நீதியமைச்சராக பதவி வகித்த விஜயதாஸ ராஜபக்ஷ' இலங்கையில் இருந்து ஒரு தரப்பினர் சிரியாவுக்கு சென்று ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்பில் பயிற்சி பெற்றுள்ளதாக குறிப்பிட்டார். 'இந்த விடயத்தை அரசாங்கம் அலட்சியப்படுத்தியது.
நல்லாட்சி அரசாங்கத்தின் உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் உள்ளிட்ட தரப்பினர் நீதியமைச்சர் விஜயதாஸவின் கருத்தை விமர்சித்தார்கள். இறுதியில் நேர்ந்தது என்ன, அரசியல் தலையீடுகளினால் அடிப்படைவாதிகள் விடுவிக்கப்பட்டார்கள். குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது, ஆகவே பொறுப்பற்ற வகையில் செயற்பட்டு விட்டு எமது மீது பொறுப்பை சுமத்தாதீர்கள்.
பயங்கரவாதி சஹ்ரான் தான் தற்கொலை குண்டுத் தாக்குலை மேற்கொள்வதற்கு முன்னர் 28 நிமிட காணொளி ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் 'தன்னையும், தாய், பிள்ளைகள் உட்பட ஏனைய தரப்பினரை அல்லாவுக்கு அர்ப்பணிப்பதாக' குறிப்பிட்டுள்ளார். ஆகவே தென்னிலங்கையில் சிங்கள அரச தலைவரை உருவாக்குவதற்காக ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு 03 விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை முறையாக அமுல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறேன். ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் இடம்பெற்றபோது நாட்டில் பாரிய இன முரண்பாடு தோற்றம் பெறுவதை பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தடுத்தார். ஆகவே விசாரணை அறிக்கைகளை அவருக்கு முழுமையாக வழங்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment