(எம்.வை.எம்.சியாம்)
வரி செலுத்தப்படாமல் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 8 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான அதிநவீன சொகுசு ஜீப் வண்டியொன்று வலான ஊழல் ஒழிப்பு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்வதற்காக குருநாகல் பகுதியிலுள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
அதிசொகுசு ஜீப் வண்டியொன்று குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக வலான ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக குருநாகல் பகுதியில் விசேட சுற்றிவளைப்பு மேற்கொண்டபோதே குறித்த ஜீப் வண்டி மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட குறித்த ஜீப் வண்டியை கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் போலி ஆவணங்களை சமர்ப்பித்து நாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வைத்தியர் ஜீப் வண்டியை விற்பனை செய்து தருமாறு குறித்த வர்த்தகருக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அதற்கமைவாக அவர் மற்றொரு வர்த்தகருக்கு விற்பனை செய்வதற்காக ஜீப் வண்டியை மறைத்து வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வைத்தியர் போலி ஆவணங்களை தயாரித்து சுங்கத் திணைக்களத்தின் ஊழியர் ஒருவரின் உதவியுடன் வரி ஏய்ப்பு செய்து இந்தக் காரை நாட்டுக்குக் கொண்டு வந்துள்ளதாகவும் இது வேறு நபர்களின் பெயரில் போலியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இந்த வாகனம் தொடர்பான ஆவணங்களும், வருமான வரி செலுத்தியதாகக் கூறப்படும் ஆவணங்களும் போலியானவை என பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment