இலங்கைக்கு கடத்துவதற்காக இந்தியாவின் வேதாளை மீனவ கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப் பொருட்களுடன் பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களிடமிருந்த இந்திய மதிப்பில் 6 கோடி ரூபா பெறுமதியான 6 கிலோ ஐஸ் போதைப் பொருட்களும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .
இந்தியாவின் சில இடங்களிலிருந்து அண்மைய காலமாக போதைப் பொருட்கள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகின்றன.
கடல் வழியாக நடைபெறும் போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களை தடுக்க இந்திய மத்திய, மாநில உளவுத்துறை, மாவட்ட காவல்துறை, சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை (07) இந்தியாவிலுள்ள வேதாளை எம்ஜிஆர் நகரில் வசித்துவரும் சேதுராஜன் என்பவர் வீட்டில் இலங்கைக்கு கடத்துவதற்காக போதைப் பொருள் பதுக்கி வைத்திருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றது .
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டிலிருந்து 6 கிலோ நிறையுடைய ஐஸ் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அத்துடன் குறித்த வீட்டின் உரிமையாளரும் உரிமையாளரின் உறவினர் ஒருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் நடத்திய தொடர் விசாரணையில் ஐஸ் போதைப் பொருளை இவர்களுக்கு சொந்தமான படகில் இலங்கைக்கு கடத்தி செல்ல முட்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அத்துடன் இந்த விசாரணையின்போது மேலும் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து மீட்கப்பட்ட ஐஸ் போதைப் பொருளின் பெறுமதி இந்திய மதிப்பில் 6 கோடி ரூபா ஆகும்.
இதேவேளை, ஐஸ் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் .
இந்திய - இலங்கை சர்வதேச கடல் எல்லை வழியாக இரு நாட்டு பாதுகாப்பையும் மீறி பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் இந்நாட்டு படகுகளில் தொடர்ந்து கடத்தப்பட்டு வரும் சம்பவம் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment