மொரோக்கோவில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான அதி பயங்கர நில நடுக்கத்தில் 820 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடஆபிரிக்க நாடான மொரோக்கோவின் ‘ஹை அட்லஸ்’ மலைப் பகுதியில் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு இப்பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நில நடுக்கமானது, மாரகேஷ் (Marrakesh) பகுதியின் தெற்கே 70 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அட்லஸ் மலைகளில் (Atlas Mountains) அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
மொரோக்கோவின் உள்துறை அமைச்சு இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.
இச்சம்பவம் அந்த நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளதோடு, சர்வதேச அளவிலும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
யுனெஸ்கோ உலக மரபுடைமைத் தலமான மேரகேஷ் நகரில் கட்டடங்கள் இடிந்து வீழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிவாசல் கோபுரம் ஒன்று இடிந்து விழுந்ததில் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதைத் தொலைக்காட்சியில் வெளியான படங்கள் காட்டுகின்றன.
எளிதில் அணுக முடியாத இம்மலைப் பகுதிகளில் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்திருக்கலாமென உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நில நடுக்கம் மையம் கொண்டிருந்த இடத்திற்கு அருகில் உள்ள அஸ்னி எனும் மலைக் கிராமத்தில் பெரும்பாலான வீடுகள் சேதமடைந்துள்ளதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.
சுமார் 20 செக்கன்களுக்கு நீடித்த நில நடுக்கத்தை அடுத்து, மேலும் பல நில அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் அதனால் வீடுகளைவிட்டு வெளியேறி பிள்ளைகளுடன் வீதிகளில் தங்கியிருப்பதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர்.
7.2 ரிக்டர் அளவு கொண்ட நில நடுக்கம் ஏற்பட்டதாக மொரோக்கோ புவியியல் மையம் தெரிவித்தது. ஆனால், அது 6.8 ரிக்டர் அளவிலானது என்று அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் அறிவித்திருந்தது.
இந்நில நடுக்கம் குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (United States Geological Survey), நேற்றிரவு 11:11 மணியளவில், ரிக்டரில் 6.8 அளவில் நில நடுக்கம் ஏற்பட்டதாகவும், புவியின் மேற்பரப்பிலிருந்து 18 கிலோ மீட்டர் கீழே நில நடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவித்திருக்கிறது.
மேலும், அடுத்த 19 நிமிடங்களுக்குப் பிறகு 4.9 ரிக்டர் அளவில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதைத் தொடர்ந்து மொரோக்கோவின் தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை நெட்வொர்க் (National Seismic Monitoring and Alert Network) தெரிவிக்கையில், நிலநடுக்கமானது ரிக்டரில் 7 ஆக பதிவாகியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.
பின்னர் இந்த நில நடுக்கம் குறித்து மொரோக்கோ உள்துறை அமைச்சகம் இன்று அதிகாலை, 296 பேர் உயிரிழந்ததாகவும், 153 பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தது.
அதோடு, அல்ஜீரியாவின் சிவில் டிஃபென்ஸ் ஏஜென்சியின் (Algeria’s Civil Defense Agency) கூற்றுப்படி, இந்த நில நடுக்கம் போர்ச்சுகல் (Portugal) மற்றும் அல்ஜீரியா (Algeria) வரை உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே தற்போது பலி எண்ணிக்கை 600 ஐ கடந்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆரம்பத்தில் சுமார் 300 பேர் என தெரிவிக்கப்பட்ட போதிலும் அது பின்னர் 600 இற்கும் அதிகம் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அத 800 ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment