மாகாண சபையில் பாரிய அதிகார கட்டமைப்பு இருக்கும் பொதுப் பணத்தை திருப்பி அனுப்பி விட்டு தற்போது பொலிஸ், காணி அதிகாரம் என மக்களுக்கு பிழையான மனோ ரீதியான உற்சாகத்தினை தமிழ் அரசியல்வாதிகள் வழங்குகின்றனர் என நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த தெரிவித்தார்.
வவுனியா தரணிக்குளத்தில் குழாய் மூலமான நீர்ப்பாசன திட்டத்தினை பெறுவதற்காக மக்களின் செலவீனங்களை உள்ளடக்கி நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு நிதி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், வட மேல் மாகாண சபையில் நான் உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்துள்ளேன். இதன் அடிப்படையில் பார்க்கின்றபோது தமிழ் அரசியல்வாதிகள் காணி, பொலிஸ் அதிகாரம் என மக்களுக்கு பிழையான மனோ ரீதியான உற்சாகத்தினை வழங்குகின்றனர்.
மாகாண சபை என்பது விசாலமான அதிகாரங்களைக் கொண்ட கட்டமைப்பு வடக்கு, கிழக்கு மாகாண சபையில் 13 ஆம் திருத்தச் சட்டம் மற்றும் பொலிஸ், காணி அதிகரம் என கூறிக்கொண்டிருப்பதை விடுத்து 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக மாகாண சபைக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை எப்படி வெல்லலாம் என சிந்திக்க வேண்டும்.
13 ஆவது திருத்தச் சட்டம் ஊடாகவே மத்திய அரசும் மாகாண அரசும் சம்பந்தப்படுகின்றது. பெரு வீதிகள், புகையிரதம், மின்சாரம், இலங்கை போக்குவரத்து சபை, நீதிக் கட்டமைப்பு, தேசிய பாடசாலைகள், தேசிய வைத்தியசாலைகள் தவிர அனைத்தும் மாகாண சபையின் ஊடாக செயற்படுத்தப்படும் நிறுவனங்களாகும். அவற்றை வெற்றி கொண்டு வேலைத்திட்டத்தினை மேற்கொள்ள முடியும். 13 ஆவது திருத்த சட்டத்தினால், கிடைக்காத சின்னச்சின்ன பிரச்சினைகளை விடுத்து கிடைத்ததை வெற்றி கொண்டு செயற்படுத்த பாடுபட வேண்டும்.
13 பற்றி பேசிக் கொண்டு வடக்கு, கிழக்கு மாகாண சபைக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட நிதியை கூட உரிய முறையில் செலவு செய்யாமல் திருப்பி அனுப்பும் நிலை காணப்பட்டது. எனவே, கிடைத்த அதிகாரத்தினை பயன்படுத்தி அதனூடாக செய்ய முடிந்தவற்றை செய்ய வேண்டும். அதனைவிடுத்து கிடைக்காததற்காக காத்திருப்பது தேவையற்றது என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் கே.கே. மஸ்தான் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment