(எம்.வை.எம்.சியாம்)
வரட்சியுடனான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நட்டயீட்டை பெற்றுக் கொடுப்பதுடன் உணவு பாதுகாப்புக்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்மை பொருத்தமட்டில் இந்த இரண்டு வேலைத்திட்டங்களையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. எந்தவித திட்டங்களும் இல்லாமல் அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நாட்டில் வரட்சியுடனான காலநிலை ஏற்படவுள்ளதாக அரசாங்கம் முன்னதாகவே அறிந்திருந்தது. வளிமண்டலவியல் அறிக்கைகளுக்கு அமைவாக இவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்க இருப்பதாக அறிந்திருந்தது. இந்த நிலைமை அறிந்திருந்தும் அரசாங்கம் எவ்விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
ஒரு பக்கத்தில் வரட்சியினால் அறுவடை குறைவடைந்து உணவு உற்பத்தி குறைவடைந்துள்ளமையால் நாட்டில் உணவுக்கான நெருக்கடி நிலவுகின்றது. விவசாயிகளின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது. அதற்கு அரசாங்கம் இரண்டு விடயங்களை கையாள வேண்டும்.
முதலாவது அவர்களுக்கு நட்டயீட்டை வழங்க வேண்டும். அடுத்ததாக நாட்டின் உணவு பாதுகாப்புக்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்மை பொருத்தமட்டில் இந்த இரண்டு வேலைத்திட்டங்களையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என தெரிகிறது.
இப்போது விவசாயிகளுக்கு நிவாரணத்தை ஒழுங்குபடுத்துவதில் எந்தவிதமான பிரயோசனங்களும் கிடையாது. அதனை சரியான நேரத்தில் வழங்கியிருக்க வேண்டும். நாட்டில் ஏற்பட்டுள்ள அடிப்படை பொருளாதார பிரச்சினைகளுக்கும், விவசாயத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், நிவாரணத்தை வழங்குவதற்கும் எந்தவித திட்டங்களும் இல்லாமல் அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கிறது என்றார்.
No comments:
Post a Comment