தமிழ் மக்களினுடைய பூர்வீக காணிகள் உடனடியாக விடுபடுகின்ற சூழல் இல்லாதிருக்கின்றது - செல்வம் அடைக்கலநாதன் - News View

About Us

About Us

Breaking

Monday, August 28, 2023

தமிழ் மக்களினுடைய பூர்வீக காணிகள் உடனடியாக விடுபடுகின்ற சூழல் இல்லாதிருக்கின்றது - செல்வம் அடைக்கலநாதன்

தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைப் பகுதியிலுள்ள தமிழ் மக்களினுடைய பூர்வீக காணிகள் உடனடியாக விடுபடுகின்ற ஒரு சூழல் இல்லாதிருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைப் பகுதியில் தமிழ் மக்களினுடைய பூர்வீக காணிகள் தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த காணிகள் விடுவிப்பது தொடர்பில் திங்கட்கிழமை (28) அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் விஜயம் செய்து நிலைமைகளை நேரில் அவதானித்திருந்தனர். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

குருந்தூர் மலைப் பிரதேசத்திலே வன இலாகா, தொல்லியல் போன்ற ஆளுகைக்குட்பட்ட காணிகளை விடுவிப்பது சம்பந்தமாக கள நிலவரத்தை மேற்கொண்டிருந்தோம்.

குறித்த விஜயத்தை வைத்து பார்க்கின்றபோது உடனடியாக இந்த நிலங்கள் விடுபடுகின்ற ஒரு சூழல் இல்லாதிருக்கின்றது. மீண்டும் ஜனாதிபதியோடு பேசுகின்ற ஒரு வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும் என்று வந்திருக்கின்ற உயர் அதிகாரிகள் இவ் விடயம் சம்பந்தமாக கூறியிருக்கிறார்கள்.

நாங்கள் மக்கள் இருந்த பூர்வீக காணிகள் என்று உறுதிபடக் கூறியிருக்கின்றோம். அதனை ஜனாதிபதியிடமும் எடுத்துக்கூறி விடுவிப்பதற்கான முயற்சியை மேற்கொள்வோம். ஆகவே என்னை பொறுத்தமட்டிலே இது உடனடியாக நடக்குமா என்று சந்தேகம் இருக்கிறது என மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment