காலி சிறையில் இருவரை பலி கொண்ட பக்றீரியா : நோயாளி கொழும்பில் அடையாளம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 30, 2023

காலி சிறையில் இருவரை பலி கொண்ட பக்றீரியா : நோயாளி கொழும்பில் அடையாளம்

'மெனிங்கோகோகல்' (Meningococcal) என்ற பக்றீரியா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நோயாளி கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஜா - எல பகுதியைச் சேர்ந்த 48 வயதான குறித்த நோயாளி தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த நபர் காய்ச்சல் காரணமாக கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இரத்மலானை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

'மெனிங்கோகோகல்' (Meningococcal) என்ற பக்றீரியா தொற்றுக்குள்ளான ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதை கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் சந்தன கஜநாயக்க உறுதிப்படுத்தினார்.

இவர் இரத்மலானையில் உள்ள நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருவதாக கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

அவருடன் தொடர்புகளை பேணியவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தேவையான நோயெதிர்ப்பு மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, அவர் பணி புரிந்த நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 30 பேர் பரிசோதனை செய்யப்பட்டு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந்த நோய், காலி சிறைச்சாலையில் அண்மையில் பதிவானது. இதனால் பாதிக்கப்பட்ட இரு கைதிகள் உயிரிழந்ததுடன், மேலும் சில கைதிகள் நோய் நிலைமையுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எவ்வாறாயினும், தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளியும் காலி சிறைச்சாலையில் பதிவான நோயாளிகளுக்கும் இடையில் எவ்வித சம்பந்தமும் இல்லையென சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் டொக்டர் விஜேசூரிய தெரிவித்தார்.

இதனிடையே, இது தொடர்பில் கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வைத்திய மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர், தொழிற்சங்க கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment