எதிர்காலத்தில் பாடசாலை தவணை ஒன்றுக்கு ஒரு செயல்நூல் வீதம் 3 தவணைகளுக்கான பாடசாலை செயல்நூல்கள் மூன்று பகுதிகளாக மாணவர்களுக்கு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஜயவர்தனபுர கல்வி வலயத்திற்குட்பட்ட ஹேவாகம மாதிரி ஆரம்ப பாடசாலையின் மாணவர் தலைவர்களுக்கான உத்தியோகபூர்வ சின்னங்கள் அணிவிக்கும் நிகழ்வில் கல்வி அமைச்சர் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வேளையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன் மூலம் பாடசாலைப் புத்தகப்பையின் எடையை குறைப்பதே நோக்கம் என அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதன் மூலம் பாடசாலைப் புத்தகப்பையை இலகுவாக தூக்கிச் செல்ல முடியும் என்பதால், மாணவர்களின் முதுகுத்தண்டு நேராக பேணப்பட்டு ஆரோக்கியமும் பேணப்படும்.
பெற்றோர்கள் பிள்ளைகளின் போசாக்கிற்கு பணம் செலவழிக்க முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணம், மேலதிக வகுப்புகளுக்கு தேவையற்ற தொகையை ஒதுக்குவதாகும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையை மாற்றும் வகையில் 2024ஆம் ஆண்டு முதல் தரம் 1 முதல் அனைத்து தரங்களுக்குமான தவணைப் பரீட்சைகள் குறைக்கப்பட்டு வருடத்திற்கு ஒரு பரீட்சை மாத்திரம் நடத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
இருப்பினும், ஒவ்வொரு பாடம் அல்லது தொகுதியின் (Modules) முடிவிலும், பெறுபேறுகள் கணனியில் பதிவு செய்யப்பட்டு, ஆண்டின் இறுதியில் பரீட்சை பெறுபேறுகளுடன் சேர்க்கப்படும் எனவும், ஆரம்பத்தில், இது பரீட்சை பெறுபேறுகளில் 70% உம் தொகுதி பெறுபேறுகளில் 30% ஆக கருதப்படும். ஆனால் படிப்படியாக இது 50% ஆக கொண்டு வரப்படும் என்று அமைச்சர் கூறினார்.
இம்முறையை நடைமுறைப்படுத்துவதில் ஒவ்வொரு நாளும் பாடசாலைக்கு வருவதும், வகுப்பில் இருப்பதும், வகுப்பில் அன்றாட பணியை செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் பாடசாலை மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகளுக்குச் செல்ல வேண்டிய தேவையோ வாய்ப்போ ஏற்படாது எனவும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பெற்றோர்கள் தேவையற்ற போட்டியில் சிக்கிக் கொள்ளாமல் மேலதிக வகுப்புகளுக்கு ஆயிரக்கணக்கில் பணம் செலவழிக்க முடியும் என்றும், அந்த பணத்தை குழந்தைகளின் உணவு மற்றும் பான தேவைக்கு செலவிட முடியும் என்றும், இலவச கல்வியின் அடிப்படை நோக்கங்கள் இதுபோன்ற செயல்பாட்டின் மூலம் நிறைவேறும் என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment