படுகொலைகள் தந்த துயரங்களும் கற்றுக் கொண்ட பாடங்களும் - News View

About Us

About Us

Breaking

Friday, August 11, 2023

படுகொலைகள் தந்த துயரங்களும் கற்றுக் கொண்ட பாடங்களும்

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

1990ஆம் ஆண்டு என்பது இலங்கையில் இனப் படுகொலைகளுக்கும் இனச் சுத்திகரிப்புக்கும் அகதி வாழ்க்கைக்கும் பெயர் போன இருண்ட கால கட்டமாக இன்றளவும் பார்க்கப்படுகின்றது.

இனப் படுகொலைகள் நடந்து இப்பொழுது 33 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் அந்தத் துயரங்கள் ஏற்படுத்திய இதயக் காயங்கள் இன்னமும் மாறாமல் மறையாமல் நெஞ்சை நெருடுகின்றது.

ஒரு கால கட்டத்தில், நினைவு தினங்கள் வரும்போதே பயங்கரங்கள் நடுங்க வைக்கும் சூழ்நிலை காணப்பட்டது. ஆனால் தற்போதைக்கு அவ்வாறான பயங்கரம் இல்லை என்பது ஆறுதலளிக்கும் விடயம்.
மட்டக்களப்பு - கொழும்பு நெடுஞ்சாலையில் மட்டக்களப்பு நகரிலிருந்து வடக்கே பயணிக்கும்போது சுமார் 12 கிலோ மீற்றர் தொலைதூரத்தில் அமைந்திருக்கிறது ஏறாவூர் நகரம்.

இந்த ஊர் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களுடன் சுமார் 50 ஆயிரம் சனத் தொகையை தன்னகத்தே கொண்டுள்ளது.

ஏற்கெனவே ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலகப் பிரிவுடன் ஏறாவூர் நகரிலுள்ள மக்களின் அரச நிருவாகக் கடமைகள் இடம்பெற்று வந்துள்ளபோதிலும் 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற இன வன்முறைகளையும் முஸ்லிம்கள் மீதான கூட்டுப் படுகொலைகளையும் தொடர்ந்து ஏறாவூர் பகுதி திறந்தவெளி அகதி முகாம்போலவும் அங்கிருந்து வெளியில் நகரமுடியாத உயிரச்சுறுத்தல் இருந்ததாலும் ஏறாவூர் நகர மக்கள் அரச நிருவாகக் கடமைகளுக்காக பிரதேச செயலகம் அமைந்திருந்த ஏறாவூரிலிருந்து சுமார் ஒரு கிலோ மீற்றருக்கும் குறைவாகவுள்ள செங்கலடிக்குச் செல்ல முடியாமற் போனது.
ஆயுதம் ஏந்திய, தமிழர் உரிமைப் போராட்டம் என்று கூறிக் கொண்ட அமைப்பினரால் 1990ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கூட்டு இனப் படுகொலையின் பின்னர் ஏறாவூர் மக்கள் தமது நிருவாக ரீதியான கருமங்களுக்காக ஊரை விட்டு வெளியேற முடியாத நிலைமை ஏற்பட்டபொழுது ஏறாவூர் நகருக்கென தனியான பிரதேச செயலகம் அமைக்கப்பட்டது.

ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலகப் பிரிவிலமைந்துள்ள மட்டக்களப்பு - பதுளை வீதியை அண்டியுள்ள பகுதிகளிலேயே வாழ்வாதாரத்துக்கான பூர்வீகக் கிராமங்களும் உள்ளன.

ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள், சேனைப் பயிர்த் தோட்டங்கள், பல்லாயிரக்கணக்கான கால்நடைகள், நன்நீர் மீன்பிடி உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதாரத் துறைகளில் அவர்கள் ஈடுபட்டு வந்தனர்.
1985 ஏப்ரலுக்குப் பின்னரான காலப்பகுதியில் அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்களில் பலர் அவ்வப்போது ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.

கிராமங்களில் வாழ்ந்த அத்தனை முஸ்லிம்களும் இனச் சுத்திகரிப்புச் செய்து விரட்டியடிக்கப்பட்டதனால் அவர்கள் அருகிலுள்ள ஏறாவூரிலும் அயல் மாவட்டங்களான பொலொன்னறுவை அம்பாறை மாவட்டங்களின் முஸ்லிம் பகுதிகளுக்கும் இடம்பெயரலாயினர்.

இவ்வாறிருக்கும் தறுவாயிலேயே முன்னதாக 1990ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் ஏறாவூர் நகரில் அமைந்திருந்த பொலிஸ் நிலையம் எல்ரீரீஈ இனரால் சுற்றிவளைக்கப்பட்டு தாக்கப்பட்டது.
அங்கிருந்த பொலிஸாரின் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. கடமையிலிருந்த தமிழ் பொலிஸாரை விடுவித்த எல்ரீரீஈ இனர், ஏனைய முஸ்லிம் சிங்களப் பொலிஸாரை தம்வசம் அழைத்துச் சென்று படுகொலை செய்திருந்தனர். பொலிஸ் நிலையத்தையும் தாக்கி அழித்துவிட்டே அவர்கள் சென்றிருந்தனர்.

எனவே, ஏறாவூர் முஸ்லிம் நகரம் பாதுகாப்பு எதுவுமற்ற நகரமாக இருந்தது. இவ்வாறிருக்கும்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான முஸ்லிம் நகரங்களில் ஒன்றான ஏறாவூரிலும் இனச் சுத்திகரிப்புச் செய்து அவர்களை அங்கிருந்து விரட்டியடிக்கும் நோக்கில் முஸ்லிம்கள் மீது கூட்டுப் படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டது.

1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11ஆம் திகதி இரவு 9 மணியளவில் ஏறாவூருக்குள் புகுந்த ஆயுததாரிகள் கர்ப்பிணியின் வயிற்றைக் கீறிக்கிழித்து சிசுவை வெளியே எடுத்து அம்மியில் வைத்து அடித்துக் கொன்றதாக சம்பவத்தில் பாதிக்கப்பட்டு தற்போதும் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏறாவூரில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், நிறைமாதக் கர்ப்பிணிகள் என வயது வரம்பு வித்தியாசமின்றி 121 பேர் சுட்டும், வெட்டியும், குத்தியும், எரித்தும் அடித்தும் கொல்லப்பட்டிருந்தனர்.

இருநூறிற்கும் மேற்பட்டோர் காயங்களுக்குள்ளானார்கள். படுகாயமடைந்தவர்களில் பலர் பின்னாட்களில் சிகிச்சை பயனின்றி மரணத்தைத் தழுவியதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

நடுநிசியில் நித்திரையிலிருந்தபோது சுட்டும் வெட்டியும் குத்தியும் அடித்தும் தீ வைத்தும் கொல்லப்பட்ட பச்சிளம் பாலகர்கள் கர்ப்பிணிகள், வயோதிபர்கள், பெண்கள், குழந்தைகள் தமிழர் உரிமைப் போராட்டத்திற்கு எதுவித பங்கமும் விளைவிக்கவில்லை. ஆனாலும், அவர்கள் முஸ்லிம்கள் என்ற ஒரேயொரு காரணத்திற்காகவே படுகொலை செய்யப்பட்டார்கள் என்பது வெளிப்படையான உண்மை.
ஏறாவூரின் பல கிராமங்கள் 1990ஆம் ஆண்டின் ஓகஸ்ட் 11ஆம் திகதி நள்ளிரவுக்குச் சற்று முன்னர் இரத்தத்தில் தோய்ந்தன. தமிழர் உரிமைப் போராட்டத்தின் பிரதான குழுவான எல்ரீரீஈ எனும் ஆயுதக் குழுவே இவ்வாறான இன சம்ஹாரத்தைச் செய்தது.

கற்றுக் கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் கடந்த 30 வருட கால ஆயுத வன்முறைகளில் இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட இடர்கள்பற்றி விவரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய சமாதானப் பேரவை அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், “இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மீது ஏற்படும் பாதிப்புக்கள் இரு வகையினதாகும். முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மைத் தமிழர்கள் மத்தியில் சிறுபான்மையினராக இருக்கின்ற அதேவேளை சிங்கள பெரும்பான்மையினர் மத்தியிலும் சிறுபான்மையினராகவே இருக்கின்றனர். இதனால், தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையிலான முரண்பாடுகளுக்கிடையில் அகப்பட்டு சிக்கிக் கொள்கின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் முஸ்லிம் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகள் பற்றி கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழீழப் புலிகள் துப்பாக்கி முனையில் மேற்கொண்ட இன அழிப்பு நடவடிக்கையால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டமை தொடர்பான தகவல்கள் ஆணைக்குழுவின் முன்னால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. (ஆணைக்குழு அறிக்கை 8.167) தொடர்ந்து செல்லும் முஸ்லிம் சமூகத்தின் மனக்குறைகள் தொடர்பாக ஆவன செய்வதுபற்றி ஆணைக்குழு குறிப்பான சிபார்சுகளைச் செய்துள்ளது.

வெளியேற்றப்பட்டவர்களாகிய முஸ்லிம்களுடைய பிரச்சினைகள் முரண்பாட்டின் பின்னர் நல்லிணக்கம் காண்பதில் பெரும் சிக்கல் வாய்ந்தனவாயுள்ளதாக ஆணைக்குழு அவதானித்துள்ளது.
வட மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் நன்கு ஒழுங்குபடுத்தி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட முறையில் இனச் சுத்திகரிப்புச் செய்து வெளியேற்றப்பட்டுள்ளனர். (அறிக்கை 5.137)

இலங்கையின் முரண்பாடுபற்றிய வரலாற்று ஆவணங்களில் முஸ்லிம்கள் தமது பூர்வீக இடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டது பற்றி சரியான முறையில் எழுதப்படவில்லையென முஸ்லிம்கள் உணருகின்றனர்.

எல்ரீரீஈ இனரால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புச் செய்திகளை இலங்கை அரசாங்கம் போதியளவு அங்கீகரிக்கவில்லை எனவும் முஸ்லிம்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
உதாரணமாக வட பகுதியில் வாழ்ந்து வந்த முஸ்லிம்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்து நன்கு திட்டமிடப்பட்ட முறையில் இனச் சுத்திகரிப்புச் செய்து பலவந்தமாக வெளியேற்றியமை தொடர்பில் ஒரு ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து விசாரணை செய்யுமாறு முஸ்லிம்களால் விடுக்கப்பட்ட கோரிக்கை இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.

ஒவ்வொருவருக்கும் தமது பரம்பரை வாழ்விடங்களில் சென்று மீளக்குடியேறுவதற்கான இடம்பெயர் சுதந்திரம் சர்வதேச ரீதியான சட்டங்களின் தத்துவங்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கின்றபோதும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட நிலையில் தமது பூர்வீகப் பகுதிகளை விட்டுப் பிரிந்து வேறு பகுதிகளில் வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் அவர்களது பாரம்பரிய இடங்களுக்குத் திரும்பிச் செல்வதற்கு அரசாங்கம் ஒழுங்கு முறையான எந்தத் திட்டங்களையும் மேற்கொள்ளாததால் தற்துணிவில் மீளக் குடியேறும் ஒரு சில முஸ்லிம்களும் பல இடையூறுகளைச் சந்தித்து வருகின்றனர்.

இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்துதல் தொடர்பிலான அரசின் கொள்கையில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீளக் குடியமர்த்துதல் தொடர்பில் அவர்களுக்கு உதவுதல் பற்றிய எந்தவொரு ஏற்பாடுகளும் இல்லை.
பலவந்தமாக வெளியேற்றப்பட்ட நிலையில் இடம்பெயர்ந்து வாழும் முஸ்லிம்களுக்காக அவர்களுடனும் அவர்கள் இடம்பெயர்ந்த பின் அங்கு வந்து வாழும் சமூகத்தாருடனும் கலந்தாலோசித்து நீடித்து நிலைக்கக் கூடியதான ஒரு தீர்வினையும் அதற்கான அரச கொள்கைகளையும்பற்றிப் பரிசீலிப்பதற்காக ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்பட வேண்டும்.

வெளியேற்றப்பட்டு இன்றுவரை தமது பூர்வீகப் பாரம்பரிய இடங்களை பறி கொடுத்துவிட்டு பரிதவித்திருக்கும் முஸ்லிம்கள் தொடர்பாக ஒரு சீரான அரச கொள்கை தேவை” என்று தேசிய சமாதானப் பேரவையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (தேசிய சமாதானப் பேரவையின் கற்றுக் கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவின் அறிக்கைக்கான ஒரு வழிகாட்டி நூல் ஜுன் 2013)

இவ்வாறான படுகொலை நிகழ்ந்த ஏறாவூர் சுஹதாக்களின் (தியாகிகள்) 33 ஆவது வருட நினைவு கூரல் வருடா வருடம் ஓகஸ்ட் 12 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.
அதேபோல 1990 ஓகஸ்ட் 03 ஆம் திகதி காத்தான்குடி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயல் மற்றும் ஹஸைனியா பள்ளிவாயலில் இரவு நேர இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது எல்ரீரீஈ இனர் துப்பாக்கிச் சூடு நடத்தி முதியவர்கள், சிறுவர்கள் உட்பட 103 பேரைக் கொலை செய்தனர். அந்தத் தாக்குதலில் 140 க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.

33 வருடங்கள் கழிந்தாலும் காத்தான்குடி பள்ளிவாசல் சுவர்களில் முஸ்லிம்களைக் கொன்றொழித்த துப்பாக்கி துளைத்த ஓட்டைகள் மாறாத வடுக்களாக இன்னமும் காணப்படுகின்றன. 

அதேபோல ஏறாவூரில் தியாகிகள் பூங்கா யுத்த கால வன்முறை அநீதிகளின் அத்தாட்சியாக இன்றும் விளங்குகின்றன.

No comments:

Post a Comment