போலி சீனக் கடவுச்சீட்டில் நெதர்லாந்து செல்ல முயற்சி : இரு இந்தியர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது - News View

About Us

About Us

Breaking

Saturday, August 12, 2023

போலி சீனக் கடவுச்சீட்டில் நெதர்லாந்து செல்ல முயற்சி : இரு இந்தியர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

போலி கடவுச்சீட்டில் நெதர்லாந்து செல்ல முயன்ற இரு இந்தியர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலியாக தயாரிக்கப்பட்ட சீன நாட்டின் கடவுச்சீட்டை பயன்படுத்தி நெதர்லாந்து செல்ல முயற்சித்த இரண்டு இந்திய பிரஜைகளை இன்று சனிக்கிழமை (12) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தில் வைத்து விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைதான இருவரும் திபெத் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆவர். 43 வயதான ஆண் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் எனவும், அவருடன் கைது செய்யப்பட்டுள்ள 39 வயதான பெண் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் எனவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்கள் இருவரும் சுற்றுலா விசாவில் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி இலங்கை வந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று சனிக்கிழமை அதிகாலை 4.45 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் அல் ஜசீரா விமானத்தில் குவைத் செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர். இவர்கள் குவைத்தில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு சென்று அங்கிருந்து நெதர்லாந்து செல்ல திட்டமிட்டுள்ளனர்.

விமானத்தில் ஏறுவதற்கான அட்டையை பெறுவதற்காக அல் ஜசீரா விமான சேவையின் கருமப்பீடத்திற்கு சென்றுள்ள நிலையில், அவர்களின் கடவுச்சீட்டை ஆராய்ந்த அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, இவருவரையும் குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து, சந்தேகநபர்களின் பயணப் பொதிகளை சோதனையிட்ட அதிகாரிகள் அதிலிருந்து இந்திய கடவுச்சீட்டுக்களை கைப்பற்றியுள்ள நிலையில், கைதான இந்திய பிரஜைகளிடம் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இரண்டு போலி கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்ள தரகருக்கு 6 ஆயிரம் அமெரிக்க டொலர்களை வழங்கியதாகவும், கடவுச்சீடுக்களை இலங்கைக்கு வந்த விமானத்தில் வைத்து தரகர் வழங்கியதாகவும் இந்திய பிரஜைகள் அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, அவர்களை கைது செய்ய அதிகாரிகள், மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலையத்தின் குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment