காணாமல் போன நான்கு சிறுமிகளும் மீட்பு : 17 வயதுடைய இரு சிறுவர்கள் கைது - News View

About Us

About Us

Breaking

Saturday, August 12, 2023

காணாமல் போன நான்கு சிறுமிகளும் மீட்பு : 17 வயதுடைய இரு சிறுவர்கள் கைது

மட்டக்களப்பு வாகரையில் கடந்த வியாழக்கிழமை (10) பாடசாலை ஒன்றில் இல்ல விளையாட்டுப் போட்டிக்கு செல்வதாக வீட்டை விட்டு வெளியேறியதையடுத்து, காணாமல்போன 13 வயதுடைய 4 சிறுமிகளை வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சுங்காங்கேணி பிரதேசத்திலுள்ள வீடொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை (11) பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அத்தோடு, இது தொடர்பில் 17 வயதான இரண்டு சிறுவர்களை கைது செய்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள 13 வயதுடைய 4 சிறுமிகள் கடந்த வியாழக்கிழமை அந்த பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெறும் இல்ல விளையாட்டுப் போட்டிக்கு செல்வதாக வீட்டை விட்டு வெளியேறி வீடு திரும்பாததையடுத்து பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இதனையடுத்து, பொலிஸார் விசாரணை மேற்கொண்ட நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (11) வாழைச்சேனை சுங்காங்கேணி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 4 சிறுமிகளை மீட்டதுடன் 17 வயதுடைய இரு சிறுவர்களை கைது செய்தனர்.

குறித்த சிறுமிகள் வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பாடசாலை ஒன்றில் 8 ஆம் தரத்தில் கல்வி கற்று வரும் நிலையில், சம்பவதினமான வியாழக்கிழமை அந்த பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெறும் இல்ல விளையாட்டுப் போட்டிக்கு செல்வதாக பெற்றோரிடம் தலா ஒவ்வொருவரும் 300 ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு அன்றையதினம் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதனையடுத்து, பாடசாலை சீருடையுடன் வீட்டில் இருந்து வெளியேறிய சிறுமிகள் வேறு ஆடைகளை அணிந்து கொண்டு அங்கிருந்து பஸ் வண்டியில் ஏறி பாசிக்குடா சென்று கடலில் நீராடிய நிலையில், அங்கு நீராடிய சுங்காங்கேணியைச் சேர்ந்த 17 மற்றும் 16 வயது சிறுவர்களுடன் இரு சிறுமிகளுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

இதனையடுத்து இரவாகியதால் சிறுமிகள் வீடு செல்ல பஸ் வண்டி இல்லாத காரணத்தால் எங்கள் வீட்டிற்கு வந்து தங்கி விட்டு காலையில் போகுமாறு காதலன்கள் சிறுமிகளை கோரியதையடுத்து 4 சிறுமிகளும் காதலன் ஒருவரின் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் கைது செய்யப்பட்ட இரு சிறுவர்களையும் வாழைச்சேனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சிறுமிகளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment