(இராஜதுரை ஹஷான்)
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் எமது ஒத்துழைப்பு தேவையாயின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவுடன் உத்தியோகப்பூர்வ பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அதனை விடுத்து கட்சியின் உறுப்பினர்களிடம் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது பயனற்றது என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
புத்தரமுல்ல பகுதியில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியலயத்தில் புதன்கிழமை (02)இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் பதவிக் காலத்தில் மிகுதி காலத்தை நிறைவு செய்வதற்காகவே ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றத்தின் ஊடாக இடைக்கால ஜனாதிபதியாக தெரிவு செய்தோம். 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் வரை அவர் பதவி வகிக்க முடியும்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒத்துழைப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தேவை என்றால் அவர் கட்சியுடன் உத்தியோகபூர்வமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அதை விடுத்து கட்சியின் உறுப்பினர்களிடம் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களை மகிழ்விக்க முயற்சிப்பது பயனற்றது.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமனவின் ஜனாதிபதி வேட்பாளர் என்று ஆளும் தரப்பின் ஒரு சில உறுப்பினர்கள் குறிப்பிடுவது அவர்களின் தனிப்பட்ட நிலைப்பாடே தவிர கட்சியின் நிலைப்பாடல்ல.
எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் சிறந்த முறையில் போட்டியிடுவோம். கட்சியை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுக்கப்பட்டதும் எமது வேட்பாளரை மக்களுக்கு அறிவிப்போம் என்றார்.
No comments:
Post a Comment