சமனலவெவ மின் உற்பத்தி நிலையத்தின் மின்சார உற்பத்தி திறன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
நீர்த் தேக்கத்தின் நீர் கொள்ளளவு வேகமாக குறைவடைகின்றமையே இதற்கான காரணமாகும்.
மின் உற்பத்தி நிலையத்தின் நுழைவாயிலில் நீர் சுழல் அபாயம் ஏற்பட்டுள்ளதால், மின் உற்பத்தித் திறனும் குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தற்போது மின்னுற்பத்தி நிலையத்தின் மின்சார உற்பத்தி 80 மெகாவாட் ஆகும்.
இதனிடையே உடவளவ நீர்த் தேக்கத்தின் நீர் கொள்ளளவு 5751 ஏக்கர் அடி வரை அதிகரித்துள்ளது.
இன்று (12) மாலை வேளையில் இடது கரைக்கு விநாடிக்கு 12.26 கன மீட்டர் நீர் திறந்து விடப்படும் என கடமை நேர பொறியியலாளர் தெரிவித்தார்.
வலது கரைக்கு விநாடிக்கு 9.69 கன மீட்டர் நீர் திறந்து விடப்படுவதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, தென் மாகாணத்தில் மின் பரிமாற்ற கட்டமைப்பின் கொள்ளளவை அதிகரிக்கும் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் 05 நாட்களுக்குள் நிறைவு செய்யப்படுமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
திட்டத்தின் இறுதிக் கட்டத்திற்கு தடையாக காணப்பட்ட பகுதியில் நிர்மாணப் பணிகளை முன்னெடுப்பதற்கு நிலத்தின் உரிமையாளர் இணக்கம் தெரிவித்துள்ளமையினால், இந்தப் பணிகள் நிறைவு செய்யப்படவுள்ளன.
இதற்கமைய, பொல்பிட்டியவில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையிலான மின் பரிமாற்ற கட்டமைப்பில் மின் கம்பிகளை காணிக்கு மேலே அமைக்கும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டது.
இதேவேளை, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் செயலிழந்துள்ள இரண்டாவது மின் பிறப்பாக்கி பழுதுபார்க்கப்பட்ட பின்னர் எதிர்வரும் புதன்கிழமை இரவிற்குள் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படுமென இலங்கை மின்சார சபை நம்பிக்கை வௌியிட்டுள்ளது.
No comments:
Post a Comment