இலங்கையில் உள்நாட்டு - வெளிநாட்டு திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை காட்சிப்படுத்துவதற்கான (பொதுமக்கள் பார்வையிடுவதற்கான) சட்ட ரீதியான அனுமதிப்பத்திர கட்டணத்தை அதிகரித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
1912 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க பொது அரங்காற்றல் சபை சட்டத்தின் கீழ், வெகுசன ஊடக அமைச்சரின் உத்தரவிற்கமைய, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இலங்கையில் முன் விளம்பரம் உள்ளடங்கலாக வௌிநாட்டு திரைப்படத்தை காட்சிப்படுத்துவதற்கான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்ள திருத்தப்பட்ட கட்டணமாக 40,000 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.
முன் விளம்பரம் உள்ளடங்கலாக உள்நாட்டு திரைப்படமொன்றை காட்சிப்படுத்துவதற்கான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்ள திருத்தப்பட்ட கட்டணமாக 15,000 ரூபா அறவிடப்படவுள்ளது.
முன் விளம்பர படத்திற்கான அனுமதிப்பத்திரத்திற்கு மாத்திரம் 1500 ரூபாவும் வரையறுக்கப்பட்ட காட்சிகளுக்கான DVD அல்லது Blu-ray திரைப்படங்களுக்கான அனுமதிப்பத்திரத்திற்கு 1500 ரூபாவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிடப்பட்ட பணிகளுக்கு அல்லது ஆய்வுப் பணிகளுக்காக திரையரங்குகளை பயன்படுத்துவதற்கான கட்டணம் 37,500 ரூபாவாக திருத்தப்பட்டுள்ளதாக அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தவிர நீண்ட நேர மேடை நாடகங்களுக்கான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கான கட்டணமாக 1500 ரூபாவும், குறுகிய நேர மேடை நாடகங்களுக்கான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கான கட்டணமாக 750 ரூபாவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உள்நாட்டுக் கலைஞர்கள் பங்குபற்றும் திறந்தவௌி இசை நிகழ்ச்சிகளுக்கான அனுமதிப்பத்திரக் கட்டணமாக 3750 ரூபா அறவிடப்படவுள்ளது.
உள்நாட்டுக் கலைஞர்கள் பங்குபற்றும் மண்டப இசை நிகழ்ச்சிகளுக்கான அனுமதிப்பத்திர கட்டணமாக 3000 ரூபா அறவிடப்படுமென அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வௌிநாட்டு கலைஞர்கள் பங்குபற்றும் திறந்தவௌி இசை நிகழ்ச்சிகளுக்கான அனுமதிப்பத்திரத்திற்கு 37,500 ரூபாவும் மண்டப இசை நிகழ்ச்சிகளுக்கான அனுமதிப்பத்திரத்திற்கு 22,500 ரூபாவும் அறிவிடப்படவுள்ளது.
தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகள் மூலம் நேரடியாக ஏற்பாடு செய்யப்படும் இசை நிகழ்ச்சிகளுக்கான அனுமதிப் பத்திரத்திற்கான கட்டணமாக 37,500 ரூபா அறவிடப்படவுள்ளது.
அத்துடன், முன்பள்ளி இசை நிகழ்ச்சிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொள்ள திருத்தப்பட்ட கட்டணமாக 2000 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment