(இராஜதுரை ஹஷான்)
கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவினால் குறைக்க தேசிய கோழிப் பண்ணை உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
தேசிய கோழிப் பண்ணை உற்பத்தியாளர்களுக்கும், விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் இடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை (1) விவசாயத்துறை அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்றது.
சந்திப்பில் கருத்து தெரிவித்த கோழிப் பண்ணை உற்பத்தியாளர்கள் இரசாயன உரம் தடை செய்யப்பட்டதால் சோளப் பயிர்ச் செய்கை உட்பட விவசாயத்துறை பாதிக்கப்பட்டது. இதனால் கோழி உற்பத்தி நேரடியாக பாதிக்கப்பட்டது.
மறுபுறம் டொலர் நெருக்கடியால் தீவனங்கள் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டதால் தொழிற்றுறை ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளோம் என்றனர்.
கோழிப் பண்ணைக்கு தேவையான மூலப் பொருட்களை அரசாங்கம் மானிய விலையில் விநியோகிக்குமாக இருந்தால் முட்டை,கோழி இறைச்சி ஆகியவற்றின் விலையை குறைக்க முடியும் என குறிப்பிட்டு பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
பேச்சுவார்த்தைகளின் பின்னர் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவால் குறைக்க இணக்கம் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, கோழித் தீனுக்காக பயன்படுத்தப்படும் சோளத்திற்கான இறக்குமதி வரியான, ரூ. 75 இனை ரூ. 25 ஆக குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு, கோழிப் பண்ணை உரிமையாளர்கள் இதன்போது விடுத்த வேண்டுகோளை அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தொழில் தரப்பினருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை குறித்து அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் யோசனை முன்வைத்து ஒரு தீர்மானத்தை எடுப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதிரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற உணவு பாதுகாப்பு மற்றும் வாழ்க்கை செலவுகள் தொடர்பான குழுக் கூட்டத்தின்போது அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கோழி இறைச்சி விலை குறித்து சாதகமான தீர்மானத்தை எடுக்காவிட்டால் தேசிய மட்டத்தில் தொழிற்றுறைக்கு தேவையான கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய நேரிடும் என ஜனாதிபதி குறிப்பிட்டதாக வர்த்தகத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மட்டத்தில் கோழிப் பண்ணை உற்பத்திகளை மேம்படுத்தவும்,மக்களுக்கு மலினா விலையில் கோழி இறைச்சி,முட்டை ஆகியவற்றை வழங்க முறையாக செயற்திட்டத்தை தயார்ப்படுத்துமாறு விவசாயத்துறை அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
No comments:
Post a Comment