அஸ்வெசும சமூக நலன்புரி நன்மைகள் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட 5 முக்கிய தீர்மானங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நேற்று (31) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டள்ளன.
அதற்கமைய, அஸ்வெசும சமூக நலன்புரி நன்மைகள் வேலைத்திட்டத்தின் கீழ் துரிதமாக நன்மைகளை செலுத்துவதற்கு ஏற்புடைய வகையில் ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கீழ் காணும் வேலைத்திட்டத்திற்காக அமைச்சரவை உடன்பாடு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.
நலன்புரி நன்மைகள் சபையால் அஸ்வெசும வேலைத்திட்டத்திற்கான ஆரம்ப சுற்றில் பயனாளிகள் 1,792,265 பேரைத் தெரிவு செய்துள்ளடன், அவர்களில் மேன்முறையீடு அல்லது ஆட்சேபனை கிடைக்கப் பெறாத பயனாளிகள் 1,588,835 பேருக்காக கொடுப்பனவுகளைச் செலுத்துதல்.
பயனாளிகளாகத் தெரிவு செய்யப்பட்டு, ஆனாலும் மேற்படி வகைகளில் உள்ளடக்கப்படுவதற்காக மேன்முறையீடுகளைச் சமர்ப்பித்துள்ள பயனாளிகள் 84,374 பேருக்கு அவர்களுடைய மேன்முறையீடுகளை மீளாய்வு செய்து இறுதித் தீர்மானத்தை வழங்கும் வரைக்கும் அவர்கள் தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள வகைக்குரிய நலன்புரி நன்மைகளைச் செலுத்துதல்.
தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகளில் 119,056 பேருக்கு எதிராக ஆட்சேபனைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த ஆட்சேபனைகள் தொடர்பாக மேற்கொள்ளப்படுகின்ற மீளாய்வுச் செயன்முறை நிறைவு பெறும் வரைக்கும் அவர்களுக்குரிய நன்மைகளை செலுத்துதல்.
வேலைத்திட்டத்தின் கீழ் நலன்புரி நன்மைகளுக்காக விண்ணப்பித்து, ஆனாலும் தெரிவு செய்யப்படாத, தற்போது சமுர்த்தி நலன்புரி நன்மைகளைப் பெறுகின்ற 393,097 பேருக்கு அஸ்வெசும வேலைத்திட்டத்தின் கீழ் ஆட்சேபனை மற்றும் மேன்முறையீட்டு செயன்முறை முழுமையாக நிறைவு பெறும் வரைக்கும் அவர்களுக்கு சமுர்த்தி நிகழ்ச் சித்திட்டத்தின் கீழ் நலன்புரி நன்மைகளைச் செலுத்துதல்.
தற்போது சிறுநீரக உதவிக் கொடுப்பனவுகள் மற்றும் இயலாமையுடன் கூடிய நபர்களுக்கான உதவிக் கொடுப்பனவுகளைப் பெறுகின்ற பயனாளிகளுக்குப் பிரதேச செயலகத்தின் ஊடாக தொடர்ந்தும் கொடுப்பனவுகளை மேற்கொள்ளல் மற்றும் முதியோருக்கான உதவிக் கொடுப்பனவுகளை அஞ்சல் அலுவலகத்தின் ஊடாக தொடர்ந்தும் வழங்குதல்.
பராமரிப்பு இல்லங்கள் அல்லது வணக்கத்தலங்களிலுள்ள சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இயலாமையுடன் கூடிய நபர்கள் அல்லது முதியோர்கள் 11,660 பேருக்கு குறித்த உதவிக் கொடுப்பனவுகளைத் தொடர்ந்தும் செலுத்துதல்.
02. திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் பணிகளை வினைத்திறனாக்கலும் முறைமைப்படுத்தலும்
திடீர் மரண விசாரணை அதிகாரிகளை நியமித்தல் கோரளைப்பற்று அடிப்படையில், நகரப் பிரிவு மட்டத்திலும், மருத்துவமனை மட்டத்திலும் மேற்கொள்ளப்பட்டிருப்பதால், குறித்த அதிகாரபரப்பினுள் எல்லைகளை திட்டவட்டமாக அறிந்து கொள்வதற்கு இயலாமையால், திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் போது பொதுமக்களுக்குப் பல சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.
அத்துடன், நீண்ட காலமாக திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்கான நியமனம் வழங்கப்படாமை, ஒரு சில மாவட்டங்களில் அதிக வெற்றிடங்கள் காணப்படுவதால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டு பொதுமக்களுக்கு மிகவும் வினைத்திறனானதும், முறைசார்ந்த வகையிலான சேவைகளை வழங்கும் நோக்கில் திடீர் மரண விசாரணை அதிகாரிகளை நியமிப்பதற்கான தகைமைகள், அவர்களின் பொறுப்புக்கள் மற்றும் பணிகள் உள்ளடங்கிய ஏற்பாடுகளைத் தெளிவாகக் குறிப்பிட்டு கடமை நிரந்தர செயன்முறைக் கோவையொன்று நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியல் மறுசீரமைப்பு அமைச்சால் தயாரிக்கப்பட்டுள்ளது.
குறித்த பணிக்கோவையின் ஏற்பாடுகளுக்கமைய தற்போது நியமிக்கப்பட்டுள்ள அனைத்து திடீர் மரண விசாரணை அதிகாரிகளும் பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அடையாளங் காணப்பட்டுள்ள மருத்துவமனைகளுக்கு இணைப்புச் செய்வதற்கும், இரு மொழிப் பயன்பாட்டு பிரதேச செயலகப் பிரிவுகளுக்காக இருமொழி திடீர் மரண விசாரணை அதிகாரிகளை நியமிப்பதற்கும், தொடர்ந்து நிலவுகின்ற வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்காகப் புதிய ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்காகவும் இவ்வமைச்சு திட்டமிட்டுள்ள தொடர் வேலைத்திட்டங்களை நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியல் மறுசீரமைப்பு அமைச்சர் அமைச்சரவைக்குச் சமர்ப்பித்துள்ளார்.
குறித்த வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவையின் உடன்பாடு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
03. கிங் கங்கை நீரால் தொடர்ந்து மக்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களைத் தடுப்பதற்காக கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல்
கிங்கங்கை நீரால் தொடர்ந்து மக்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களைத் தடுப்பதற்கு நிரந்தர தீர்வொன்றை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கான சாத்தியவளக் கற்கையை மேற்கொள்வதற்காக MCC – Sinohydro Consortium நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. 2006 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க மதுசாரம் மற்றும் புகையிலை மீதான தேசிய அதிகார சபைச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்
சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி போன்ற பதவிகளை அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்களாக நியமிப்பதற்கு இயலுமாகும் வகையில் 2006 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க மதுசாரம் மற்றும் புகையிலை மீதான தேசிய அதிகாரசபைச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. இந்தியாவின் கொச்சி சர்வதேச விமான நிலையம் மற்றும் இந்தோனிசியாவின் ஜகார்த்தா சர்வதேச விமான நிலையங்களில் ஸ்ரீலங்கன் விமானக் கம்பனியின் விமானங்களுக்கான சேவைகளைப் பெறல்
ஸ்ரீலங்கன் விமான கம்பனியால் இந்தியாவின் கொச்சி மற்றும் இந்தோனிசியாவின் ஜகார்த்தா சர்வதேச விமான நிலையங்களில் விமானப் பயணிகள் மற்றும் நடமாடும் விமான மின்னுயர்த்தி மற்றும் பொருட்களை ஏற்றி இறக்கல்கள் போன்ற பிரிவுகளுக்காக சேவை வழங்குநர்களைத் தெரிவு செய்வதற்கான விலைமுறி கோரப்பட்டுள்ளது.
அதற்கமைய அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைகளுக்கமைய கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் சேவை வழங்கல் ஒப்பந்தத்தை AI Airport Services Limited இற்கும், ஜகார்த்தா சர்வதேச விமான நிலையத்தில் சேவை வழங்கும் ஒப்பந்தம் PT. Gapura Angkasa இற்கும் வழங்குவதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment