இலங்கை - இந்திய ஒப்பந்தம் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பொருளாதார அபிவிருத்தி, அரசியல் தீர்வு உள்ளடங்கலாக சகல அம்சங்களையும் அமுல்படுத்த வேண்டும் என்பதை இலங்கைக்கு தொடர்ந்து வலியுறுத்துவோம் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளிடம் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் பிரதிநிதிகள் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை (1) கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் இடம்பெற்றது.
இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை, கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த அமுலாக்கம், இனப்பிரக்கினைக்குத் தீர்வு ஆகியவற்றுக்கு இந்தியாவின் ஒத்துழைப்பை தொடர்ந்து எதிர்பார்த்துள்ளோம். காலா காலமாக முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு தீர்வு அவசியம் என்று உயர்ஸ்தானிகரிடம் வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இலங்கை - இந்திய ஒப்பந்தம் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பொருளாதார அபிவிருத்தி, அரசியல் தீர்வு உள்ளடங்கலாக சகல அம்சங்களையும் அமுல்படுத்த தொடர்ந்து வலியுறுத்துவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்
No comments:
Post a Comment