(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டு, சிறந்த முறையில் அரச நிர்வாகத்தை முன்னெடுப்பாராயின் ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு ஆதரவு வழங்கலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி தெரிவித்தார்.
கொழும்பில் செவ்வாய்க்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை திருத்திக் கொள்ள நிதியமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளது.
அஸ்வெசும திட்டத்தில் உள்ளடங்காத தரப்பினரிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ள மேன்முறையீடுகள், முறைப்பாடுகள் ஆகியவற்றை பரிசீலனை செய்யும் வரை சமுர்த்தி பயனாளர்களுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்ட கொடுப்பனவுகளை தொடர்ந்து வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை சிறந்ததாகும்.
நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்கள். மக்களுக்கு எவ்வழியிலாவது அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டும் என்பதையே தொடர்ந்து வலியுறுத்துகிறோம். நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் எடுக்கும் சிறந்த திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எமது அரசாங்கம் எடுத்த ஒரு சில தவறான தீர்மானங்களினால் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்தது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். பொருளாதாரப் பாதிப்புக்கு ஆட்சியில் இருந்த அரசியல் கட்சிகள் அனைத்தும் பொறுப்புக் கூற வேண்டும்.
நெருக்கடியான சூழலில்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை பொறுப்பேற்றார். பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டு சிறந்த முறையில் அரச நிர்வாகத்தை முன்னெடுப்பாராயின் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கலாம் என்றார்.
No comments:
Post a Comment