நீர் வழங்காவிட்டால் 16.81 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படும் என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 2, 2023

நீர் வழங்காவிட்டால் 16.81 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படும் என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்

எம்பிலிப்பிட்டிய பகுதியில் 65,000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற் செய்கைக்கு நீர்ப்பாசனம் வழங்குவதற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விரைவில் 16.81 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படக்கூடும் என்பதால், விரைவில் நீரை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கதிர் விட்டுவரும் நெற் செய்கை வயல்களுக்கு தண்ணீர் வழங்கக் கோரி எம்பிலிப்பிட்டி விவசாயிகள் ஆரம்பித்த சத்தியாகிரகப் போராட்டம் இன்னும் தொடர்கிறது என்றாலும், மோசடியான அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கு அது பற்றி எந்தவித அக்கறையும் இல்லை.

சுமார் 75,000 ஏக்கர் பயிரிடப்பட்ட காணிகளுக்கு நீர்ப்பாசனம் வழங்க அரசாங்கம் தவறிவிட்டுள்ளது. அதில் 65,000 ஏக்கரில் மட்டும் நெற் செய்கை செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் வாரத்தில் நெற் செய்கையில் 16.81 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

குளிரூட்டி அறைகளில் இருந்து அரசாங்கம் எடுக்கும் தன்னிச்சையான முடிவுகளால் பாரிய அனர்த்தம் ஏற்படுவதை தடுக்க முடியாதுபோகும் என்பதோடு, உரத்தடைக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தன்னிச்சையான முடிவுகளை அரசாங்கம் நினைவுகூர வேண்டுமென நினைவூட்டுகின்றோம்.

நாடு மிக மோசமான நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இவ்வேளையில், நாடு முழுவதும் சோறு போடும் விவசாயிகளின் வாழ்வோடு விளையாடுவதனால் ஏற்படும் விளைவுகளை அரசாங்கம் மட்டுமல்லாது நாடு முழுவதும் அனுபவிக்க நேரிடும் எனவும், நாட்டின் விவசாயத்தை முடக்குவதற்கு எடுக்கும் அரசாங்கத்தின் நுட்பமான மற்றும் தந்திரமான முயற்சியா எனவும் சந்தேகிக்க வேண்டியுள்ளது.

விவசாயிகளை மேலும் ஏமாற்றாமல் அவர்களின் விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான தண்ணீரை அரசாங்கம் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

அரசாங்கம் எப்பொழுதும் மக்களுக்கு சார்பான செயற்பாடுகளையேயன்றி மக்களுக்கு விரோதமான செயற்பாடுகளையே செய்து வருகின்றது. அதன் விளைவுகள் அரசாங்கத்துக்கு பேரிடியாக விழும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

No comments:

Post a Comment