மருந்துத் தட்டுப்பாடு இயற்கையாக தோன்றிய பிரச்சினை அல்ல : கொள்வனவு எனும் போர்வையில் பல கோடி ரூபா கொள்ளை - விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 29, 2023

மருந்துத் தட்டுப்பாடு இயற்கையாக தோன்றிய பிரச்சினை அல்ல : கொள்வனவு எனும் போர்வையில் பல கோடி ரூபா கொள்ளை - விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ

( எம்.வை.எம்.சியாம்)

நாட்டின் சுகாதாரத் துறையில் நிலவும் மருந்து தட்டுப்பாடு, தரமற்ற மருந்து பாவனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திடம் கடிதமொன்றை கையளித்துள்ளோம். இதேவேளை இந்த பிரச்சினைகள் தொடர்பில் ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றையும் முன்வைக்கவுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நாட்டில் கடந்த ஒன்றரை வருடங்களாக மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது. இவை இயற்கையாக தோன்றிய பிரச்சினை அல்ல. பொருத்தமற்ற நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம் காரணமாக ஏற்பட்ட ஒன்று. நாட்டுக்குள் தரமற்ற மருந்துகள் கொண்டு வரப்பட்டபோது நாம் எச்சரிக்கை விடுத்தோம்.

அதனை மீறி மருந்து ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவினால் இறக்குமதி செய்த மருந்துகள் காரணமாக பல மரணங்கள் சம்பவித்துள்ளன. இந்த விடயங்கள் தொடர்பில் நாம் தொடர்ச்சியாக சுகாதார அமைச்சுக்கு தெரிவித்த போதிலும் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டமையால் இன்று நாம் பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

இன்றளவிலும் மந்த போசனையால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள் மற்றும் அங்கவீனர்கள் தொடர்பான முறையான எந்தவித தகவல்களும் சுகாதார அமைச்சிடம் இல்லை. பொய்யான தரவுகளை பயன்படுத்தி உண்மையான தரவுகளை மறைப்பதற்கு முயற்சிக்கிறார்கள்.

அமைச்சர், அமைச்சின் செயலாளர், சுகாதார பணிப்பாளர் நாயகம் என அனைவராலும் மேற்கொள்ளப்படும் தவறுகள் தொடர்பில் தகவல்களை வெளிப்படுத்தும் அதிகாரிகளை அடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கிறார்கள். அவசர மருந்து கொள்வனவு எனும் போர்வையில் பல கோடிக் கணக்கில் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது.

மருந்து தட்டுப்பாடு, தரமற்ற மருந்து கொள்வனவு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தற்போது ஐக்கிய நாடுகள் அலுவலகத்திடம் கடிதமொன்றை சமர்ப்பித்துள்ளோம். நாம் அடுத்த வாரம் ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளோம். அப்பாவி மக்களின் உயிர்களை பாதுகாக்கும் நோக்கில் நாம் இந்த நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment