பெரும்பான்மையின மக்கள் சரியான தீர்மானத்தை எடுக்காவிட்டால் புத்தசாசனம் இல்லாதொழிக்கப்படும் - எல்லே குணவங்ச தேரர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 29, 2023

பெரும்பான்மையின மக்கள் சரியான தீர்மானத்தை எடுக்காவிட்டால் புத்தசாசனம் இல்லாதொழிக்கப்படும் - எல்லே குணவங்ச தேரர்

(இராஜதுரை ஹஷான்)

மழைக் காலத்துக்கு வெளிவரும் அட்டை பூச்சிகளைப்போல் எதிர்வரும் ஓரிரு மாதங்களில் அரசியல்வாதிகள் தேசியம், புத்தசாசனம் ஆகியவற்றை அக்கறையுடன் பேசுவார்கள். பெரும்பான்மையின மக்கள் சரியான தீர்மானத்தை எடுக்காவிட்டால் 2500 வருட கால புத்தசாசனம் இல்லாதொழிக்கப்படும் என தேசிய வளங்களை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்த கருத்துக்கள், அரசியல்வாதிகளே நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளினார்கள். ஆனால் பொருளாதார பாதிப்பின் சுமை ஒட்டு மொத்த மக்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.

பொருளாதார பாதிப்பால் நடுத்தர மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு ஒரு நாள் தேவைகளை கூட நிறைவேற்ற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து நாட்டை மீட்பதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. கடன் பெறுவதையும் மிகுதியாக உள்ள தேசிய வளங்களை ஏலத்தில் விடுவதையும் தவிர இந்த அரசாங்கத்திடம் பொருளாதார மீட்சித் திட்டங்களும் கிடையாது.

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த அமுலாக்கம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எவ்வாறு 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவார்கள் என்பதை நாங்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அரசாங்கம் செயற்படும்போது நாங்களும் அதற்கு ஏற்றவாறு செயற்படுவோம்.

மழைக் காலத்துக்கு வெளியில் வரும் அட்டைப் பூச்சிகளைப்போல் இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்தல் நெருங்கும்போது அரசியல்வாதிகள் தேசியம், புத்தசாசனம் பாதுகாப்பு, இனம் தொடர்பில் கருத்துரைத்துக் கொண்டு வெளிவருவார்கள். பெரும்பான்மையின மக்கள் இம்முறை சிறந்த தீர்மானத்தை எடுக்காவிட்டால் 2500 ஆண்டுகால பழமை வாய்ந்த புத்தசாசனம் இல்லாதொழிக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment