முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தண்ணி முறிப்பு குருந்தூர் மலை பகுதியில் தமிழ் மக்களினுடைய பூர்வீக காணிகள் தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த காணிகள் விடுவிப்பது தொடர்பில் குறித்த பகுதிக்கு திங்கட்கிழமை (28) அரசியல் தலைமைகள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் விஜயம் செய்து நிலைமைகளை நேரில் அவதானித்தனர்.
குருந்தூர் மலைப் பகுதியிலே 1933.05.12 அன்று வர்த்தமானி ஊடாக 78 ஏக்கர் 2 ரூட் 12 பேர்ச் காணிகள் தொல்பொருள் திணைக்களத்திற்காக எடுக்கப்பட்டிருந்தது. தற்போது குறித்த பகுதியில் தமிழ் மக்கள் வாழ்ந்த பூர்வீக காணிகள் வயல் நிலங்கள் உள்ளடங்களாக மேலும் 306 ஏக்கர் காணிகளை தொல்பொருள் திணைக்களம் அபகரிப்பதற்காக எல்லை கற்களை போட்டுள்ளது.
தண்ணிமுறிப்பு - குருந்தூர் மலையை அண்டியுள்ள தமிழ் மக்களின் பூர்வீக விவசாயக் காணிகளையும், குடியிருப்புக் காணிகளையும் வன வளத் திணைக்களம் மற்றும் தொல்லியல் திணைக்களம் என்பன ஆக்கிரமித்துள்ளன. இந்நிலையில் குறித்த தண்ணிமுறிப்பு பகுதியில் தம்மை மீள்குடியேற்றுமாறும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விவசாயக் காணிகளை விடுவிக்குமாறும் காணிகளுக்குரிய தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், காணிகளுக்குரிய பொதுமக்கள் ஆகியோர் இணைந்து தண்ணிமுறிப்புப் பகுதிக்கு (28) இன்று விஜயம் மேற்கொண்டு காணிப் பிணக்குத் தொடர்பில் ஆய்ந்துள்ளனர்.
இருப்பினும் இந்த கள ஆய்வில் தமக்குத் திருப்தி இல்லை எனவும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீக விவசாயக் காணிகள் விடுவிக்கப்படுவதுடன், தண்ணிமுறிப்பில் 1984ஆம் ஆண்டிற்கு முன்னர் தாம் வாழ்ந்த பகுதிகளில் விரைவாக குடியமர்த்தப்பட வேண்டுமெனவும் காணிகளுக்குரிய தமிழ் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் கடந்த 1984ஆம் ஆண்டு அசாதாரண சூழ்நிலை காரணமாக தமது வாழ்விடங்களிலிருந்து வெளியேறியிருந்தனர்.
இவ்வாறு இடப்பெயர்வைச் சந்தித்த தமிழ் மக்கள் இதுவரையில் அவர்களது பகுதிகளில் மீளக்குடியமர்த்தப்படவில்லை. இருப்பினும் குறித்த தமிழ் மக்கள் தண்ணிமுறிப்பு பகுதியிலுள்ள தமது, விவசாய நிலங்களில் நெற்பயிர்ச் செய்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு குருந்தூர் மலையை அண்டிய பகுதிகளில் உள்ள தமிழ் மக்களின் குடியிருப்புக் காணிகளை முற்றாக ஆக்கிரமித்தும், விவசாய நிலங்களை ஊடறுத்து தொல்லியல் திணைக்களம் எல்லைக் கற்களை நாட்டியிருந்தது.
இருப்பினும் காணிகளுக்குரிய தமிழ் மக்கள் கடந்த 2021 இல், பெரும்போக நெற்பயிர்ச் செய்கைக்கான தயார்ப்படுத்தலில் ஈடுபட்டனர்.
இவ்வாறு தமிழ் விவசாயிகள் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது தொல்லியல் திணைக்களம் மற்றும் வன வளத் திணைக்களத்தினர், பௌத்த தேரர்கள் சிலரும் இணைந்து விவசாய நடவடிக்கைகளுக்குத் தடை விதித்தனர்.
அத்தோடு வன வளத் திணைக்களத்தினர், அங்கு விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்களுக்கெதிராக நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்ததுடன், தற்போதும் அது தொடர்பான வழக்கு நீதிமன்றில் நிலுவையிலுள்ளது.
இந்நிலையில் காணிகளுக்குரிய தமிழ் மக்கள் தம்மை தமது பகுதிகளில் மீளக்குடியமர்த்துமாறும், தமது விவசாய நிலங்களில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்குமாறும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இவ்வாறான சூழலில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் கடந்த 18 ஆம் திகதி அன்று இடம்பெற்ற காணிப் பிணக்குகளைத் தீர்ப்பது தொடர்பிலான கலந்ரையாடலில் இக்காணிப் பிணக்குத் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
அந்த வகையில் குறித்த காணிப் பிணக்குத் தொடர்பில் உரிய திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், மக்கள் பிரதிநிதிகள், காணிகளுக்குரிய பொதுமக்கள் ஆகியோர் குறித்த பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளைப் பார்வையிட்டு அதன் பின்னர் இக்காணிப் பிணக்குகள் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.
அதற்கமைவாக (28) இன்று பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், சாள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட மாவட்டச் செயலக அதிகாரிகள், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், வன வளத் திணைக்கள அதிகாரிகள், காணிக்குரிய பொதுமக்கள் ஆகியோர் தண்ணிமுறிப்புப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டு காணிப் பிணக்குத் தொடர்பில் ஆரயப்பட்டது.
அந்த வகையில் தண்ணிமுறிப்பு பகுதியில் மீளக்குடியமர்த்துவது தொடர்பில் உரிய அமைச்சுக்களுடனும், பணிப்பாளர்ளுடனும் பேசப்பட்டது.
அதேவேளை தொல்லியல் திணைக்கள எல்லைக் கற்களுக்கு வெளியே விவசாய நடவடிக்கை மேற்கொள்ள முடியும் எனத் தீர்மானிக்கப்பட்டதுடன், தொல்லியல் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் மற்றும் உரிய அமைச்சுக்களுடனும், அதிகாரிகளுடனும் கலந்துரையாடியபின்பே முடிவு எட்டப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில் தமது விவசாயக் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படுவதுடன், தாம் தமது பகுதிகளில் விரைவில் மீளக்குடியேற்றப்பட வேண்டுமெனவும் காணிகளுக்குரிய பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment