போதைப் பொருள் சுற்றிவளைப்பிற்கு சென்றிருந்த போது பொலிஸாரால் நேற்று (07) கைது செய்யப்பட்ட மதுவரித் திணைக்கள அதிகாரிகள் நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இன்று (08) பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
மதுவரித் திணைக்களத்தின் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினர் பம்பலப்பிட்டி கரையோர வீதியில் நேற்று மாலை சுற்றிவளைப்பை முன்னெடுத்திருந்தனர்.
மதுவரி பரிசோதகரும், 7 அதிகாரிகளும் அடங்கிய குழுவொன்று இந்த சுற்றிவளைப்பை முன்னெடுத்திருந்ததுடன், போலியான கொள்வனவாளர் ஒருவரை ஈடுபடுத்தி சந்தேகநபர்களை சட்டத்தின்முன் நிறுத்துவதே இவர்களின் திட்டமாக இருந்தது.
அவர்கள் போலி கொள்வனவாளர் ஊடாக 150 கிராம் ஹெரோயினை கொள்வனவு செய்துள்ளனர். இதன்போது, ஹெரோயினை விற்பனை செய்த நபரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், விற்பனையாளருடன் வந்திருந்த நபர் தப்பிச் சென்றதாக மதுவரித் திணைக்கள ஊடகப் பேச்சாளர், மேலதிக மதுவரி ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க குறிப்பிட்டார்.
தப்பிச் சென்றவரை கைது செய்வதற்காக மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து தப்பியோடிய சந்தேகநபர், வௌ்ளவத்தையில் தான் பயணித்த காரை கைவிட்டு, முச்சக்கர வண்டியொன்றில் ஏறி தப்பியோடியுள்ளார்.
இதனிடையே, இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையுடன் தொடர்புடைய மதுவரி அதிகாரிகள் நால்வரும் மீண்டும் தமது தலைமையகத்திற்கு சென்றுகொண்டிருந்த போது வௌ்ளவத்தையில் பொலிஸாரால் வீதித் தடைக்கு அருகில் கைது செய்யப்பட்டனர்.
துப்பாக்கிப் பிரயோகத்திற்காக பயன்படுத்தப்பட்ட, மதுவரி பரிசோதகருக்கு உரிய துப்பாக்கி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட நால்வரும் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முற்பகல் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த துப்பாக்கிப்பிரயோகம் தனிப்பட்ட காரணங்களுக்காகவா இடம்பெற்றது எனும் கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் இதன்போது நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
மதுவரி அதிகாரிகளின் சுற்றிவளைப்பு தொடர்பில் பொலிஸூக்கு அறிவிக்கப்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அறிவித்தலை வழங்குவதற்கான சந்தர்ப்பத்திற்கு இடமளிக்காத வகையில், அதற்கு முன்னரே பொலிஸார் மதுவரி அதிகாரிகளை கைது செய்ததாக மதுவரி திணைக்களம் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர்.
இது, கடமையின்போது இடம்பெற்ற சட்டபூர்வமான துப்பாக்கிப் பிரயோகமெனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம், மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கு பிணை வழங்கி விடுவித்தது.
வழக்கு மீண்டும் எதிர்வரும் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இதனிடையே, ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டதுடன், அவர்கள் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பதில் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர கூறுகையில், முதலில் அந்த பகுதிகளில் வீதித் தடைகளை ஏற்படுத்தினோம். பின்னர் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு வேனின் இலக்கத்தையும் கண்டறிந்தோம். அதற்கமைவாக வீதித் தடைகளுக்கு வேனின் இலக்கங்கத்தை வழங்கினோம்.
அதன்படி வெள்ளவத்தை வீதித் தடை போடப்பட்டிருந்த சோதனைச் சாவடியில் அந்த வேனை கண்டுபிடிக்க முடிந்தது. இதன்போது வேனில் நால்வர் இருந்தனர். அதன் பின்னர் நால்வரையும் பொலிஸார் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் கலால் திணைக்களத்தின் பரிசோதகர் என்பதுடன் மற்றையவர்கள் கலால் திணைக்களத்தின் அதிகாரிகள் என அடையாளம் காணப்பட்டது.
அவர்கள் நால்வரும் சிவில் உடையில் இருந்தனர். அவர்கள் கடமைக்கு வருவதாக பொலிஸாருக்கு அறிவிக்க இல்லை. சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் காரில் பயணித்த நபர் குறித்த ஜீப் வண்டியை 2 கிலோ மீட்டர் தூரத்தில் விட்டுச் சென்றுள்ளார். அவர் முச்சக்கர வண்டியில் தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கலால் திணைக்களத்தின் ஆணையாளர் கபில குமாரசிங்க கூறுகையில், ஹேரோயின் சுற்றிவளைப்புக்காக சென்ற கலால் திணைக்கள அதிகாரிகளே கைது செய்யப்பட்டுள்ளனர். 8 அதிகாரிகள் கொண்ட இரண்டு குழுக்கள் இந்த சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்.
கிடைத்த தகவலுக்கு அமைவாக போதைப் பொருள் கடத்தல்காரர் ஒருவரிடம் 150 கிராம் ஹெரோயின் கொள்வனவு செய்ததாக தகவல் கிடைத்ததையடுத்து சந்தேகநபர்களை கைது செய்வதற்கு முயன்றுள்ளனர்.
இதன்போது ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த மற்றுமொரு சந்தேகநபர் வாகனத்தில் தப்பிச் செல்ல முயற்சித்தபோது வாகனத்தின் மீது அதிகாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
எனினும் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளும்போது சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதுடன் போதைப் பொருளுடன் கைது செய்த அதிகாரிகள் குழு தமது தலைமையகத்திற்கு வருகை தந்துள்ளனர். தப்பிச் சென்ற சந்தேகநபரை கைது செய்வதற்கு முயற்சித்த மற்றைய நால்வர் கொண்ட அதிகாரிகள் குழுவையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் இவ்வாறான சுற்றிவளைப்புகளின்போது துப்பாக்கிகளை பயன்படுத்துவதற்கு தமது திணைக்களத்துக்கு பூரண அதிகாரமுள்ளதாகவும் அதற்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment