முல்லைத்தீவு வைத்தியசாலைகளில் வைத்திய நிபுணர்கள் இல்லாமை ஒரு குறையாக உள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நேற்றையதினம் (03) கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், முல்லைத்தீவு வைத்தியசாலைகளில் நிரந்தர வைத்திய நிபுணர்கள் இல்லாமை ஒரு குறையாக உள்ளது. குறிப்பாக, பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை உள்ள நிலையில் அதிகமான வைத்திய நிபுணர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டார்கள்.
இறுதியாக நடைபெற்ற கலந்துரையாடலில் இரண்டு வைத்தியசாலைகளுக்கும் இரண்டு வைத்தியர்களையாவது நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டபோது பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் சுகாதார அமைச்சரும் இருந்தார். அதனை நாங்கள் தற்போது தொடர்ந்து கேட்கின்றோம்.
எதிர்வரும் காலங்களில் நிரந்தர வைத்திய நிபுணர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். விசேட ஆளணி எங்களுக்கு தேவையாக உள்ளது. அதேவேளை, நிதி அமைச்சு புதிய ஆளணியை நியமிக்காத ஒரு சூழ்நிலையும் காணப்படுகிறது.
அத்துடன், உள்ளக கட்டமைப்பை பேணுவதில் கூட இரண்டு வைத்தியசாலைகளிலும் குறைபாடுகள் நிலவுகின்றன. உள்ளக கட்டமைப்பிலும் விரைவான அபிவிருத்தி தேவைப்படுகிறது. அதற்குரிய திட்டம் ஏதும் இருந்தால், அதனை மேற்கொள்ள வேண்டும்.
அதுமட்டுமன்றி, முல்லைத்தீவு வைத்தியசாலையில் காணி பிரச்சினை நீள்வதால் கட்டடங்கள் விரிவுபடுத்தப்படவில்லை.
மன்னாரிலும் சீ.டி. (CT) ஸ்கேன் கருவி தொடர்பில் பிரச்சினை இருக்கிறது. அங்கும் நிரந்தர வைத்திய பணிப்பாளர் இல்லாமை ஒரு பிரச்சினையாகவே உள்ளது.
இது தொடர்பில் கூட்டத்தில் தீர்மானமொன்றை முன்வைத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அமைச்சர்களுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டு, இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்வோம் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்றார்.
No comments:
Post a Comment