தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பான அத்தியாயம் ஒன்றை உள்ளடக்க நடவடிக்கை : புதிய திருத்தங்களை சமர்ப்பிக்க தொழிற்சங்கங்களுக்கு காலவகாசம் வழங்க வேண்டும் - மனுஷ நாணயக்கார - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 30, 2023

தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பான அத்தியாயம் ஒன்றை உள்ளடக்க நடவடிக்கை : புதிய திருத்தங்களை சமர்ப்பிக்க தொழிற்சங்கங்களுக்கு காலவகாசம் வழங்க வேண்டும் - மனுஷ நாணயக்கார

(எம்.ஆர்.எம்.வசீம்)

புதிய தொழில் சட்டத்துக்கு தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பான அத்தியாயம் ஒன்றை உள்ளடக்க இருப்பதுடன் அது தொடர்பான பிரேரணைகளை சமர்ப்பிப்பதற்காக உப குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தாெழில் சட்டத்துக்கு புதிய திருத்தங்களை சமர்ப்பிப்பதற்கு தொழிற்சங்கங்களுக்கு அடுத்த மாதம் முதல் வாரம் வரை காலம் வழங்க வேண்டும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தேசிய தொழில் ஆலாேசனை சபைக்கு தெரிவித்தார்.

தேசிய தொழில் ஆலாேசனை சபைக் கூட்டம் (29) செவ்வாய்க்கிழமை கூடியபோதே அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், தற்போது இருக்கும் காலம் கடந்த தொழில் சட்டங்களுக்கு திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன.

சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் பிரேரணைகளுக்கு திருத்தங்களை முன்வைக்காமல், தொழில் சட்டத்துக்கு புதிய திருத்தங்களை சமர்ப்பிக்க தொழிற்சங்கங்களுக்கு அடுத்த மாதம் முதல் வாரம் வரை காலம் வழங்க வேண்டும்.

தொழில் சட்டத்தை சமர்ப்பிப்பதை தாமதப்படுத்தும் நோக்கில் குறித்த திருத்தங்களை சமர்ப்பிக்கும் நடவடிக்கையை தாமதப்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

தொழில் சட்டம் தொடர்பில் இன்னும் இரண்டு வாரங்களில் கருத்துப் பத்திரம் ஒன்றுக்கு அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக் கொள்வோம்.

இதுவரை அதிகமான தொழில் சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களின் கருத்துக்களை அது தொடர்பில் சமர்ப்பித்திருக்கின்றன.

இதற்கு சமமாக சட்ட வரைபு திணைக்களத்துடன் இணைந்து பிரேரணைகளை வரைபு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட இருக்கிறது.

சட்ட வரைபு திணைக்களத்தினால் சட்டமூலம் தயாரிக்கப்பட்ட பின்னர், அதுவும் மக்கள் கருத்தை பெற்றுக் கொள்வதற்காக பகிரங்கப்படுத்தப்படும்.

தொழில் சங்கங்களினால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் திருத்தங்களும் சட்ட வரைபு திணைக்களத்துக்கு சமர்ப்பிக்கப்படும்.

மேலும் புதிய தொழில் சட்டத்துக்கு தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பான அத்தியாயம் ஒன்றையும் உள்ளடக்க இருப்பதுடன் அது தொடர்பான பிரேரணைகளை சமர்ப்பிப்பதற்காக தேசிய தொழில் ஆலாேசனை சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தோட்டத் தொழிற்சங்கங்களை சேர்ந்த உப குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு தாக்கம் செலுத்தும் விசேட நிலைமைகளை கருத்திற் கொண்டு குறித்த பிரேரணையை சமர்ப்பிக்கும் சந்தர்ப்பத்தை அந்த குழுவுக்கு வழங்கி இருக்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment