(எம்.மனோசித்ரா)
மக்களின் வரிப் பணத்தில் ஊதியம் பெறும் நான் அந்த மக்களுக்காகவே பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கின்றேன். அது எனது பிரதான கடமையாகும். அதனை தடுப்பதற்கு ஜனாதிபதிக்கு மாத்திரமல்ல. வேறு எவருக்கும் உரிமை இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொள்கை திட்டமிடல் மற்றும் அமுலாக்கல் துறையில் பல ஆண்டுகளாக அநீதி இழைக்கப்பட்ட அதிகாரிகள் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், பாராளுமன்றத்தில் நான் அநாவசிய கேள்விகளை எழுப்பி நேரத்தை வீணடிப்பதாக ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளனர்.
இதனால் பாராளுமன்ற அமர்வுக்கான செலவும் வீணடிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச பத்திரிகைகள் இரண்டிலும் இந்த செய்திகள் வெளியாகியுள்ளமையை எண்ணி உண்மையில் மகிழ்ச்சியடைகின்றேன்.
நான் எனது கடமைகளை சரியாக செய்கின்றேன் என்பது முழு நாட்டுக்கும் நிரூபிக்கப்பட்டுள்ளது. எம்மை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்த மக்களுக்காக பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் நாம் பாராளுமன்றத்தில் எமது கடமையை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம்.
பாராளுமன்றத்தின் ஊடாக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதே எமது பொறுப்பாகும்.
நாட்டு மக்களின் வரிப் பணத்தில் சம்பளத்தையும், வெவ்வேறு சிறப்புரிமைகளையும் பெறும் எமது பிரதான கடமை அதுவேயாகும்.
இதனை நாம் நிறைவேற்றுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத பொதுஜன பெரமுனவினர் எனது குரலை ஒடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோருகின்றனர். சஜித் பிரேமதாச அநாவசிய கேள்விகளை எழுப்புவதாகக் கூறுகின்றனர்.
நான் எனது தனிப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் பேசவில்லை. நாட்டின் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பிலேயே நான் கேள்வியெழுப்புகின்றேன்.
இவை தொடர்பில் கேள்விகளை எழுப்புவதற்கே நான் தயாராகிச் செல்கின்றேன். குடிநீர் பிரச்சினை, நீர்ப்பாசன பிரச்சினை, தேசிய கொள்கை முகாமைத்துவம் போன்ற அரசாங்கத்தால் அவதானம் செலுத்தப்படாத பிரச்சினைகள் தொடர்பிலேயே நான் கேள்வியெழுப்புகின்றேன்.
இதன் காரணமாகவே எனது குரலை ஒடுக்க முயற்சிக்கின்றனர். மக்களின் வரிப் பணத்தில் ஊதியம் பெறும் நான் அந்த மக்களுக்காகவே குரல் கொடுக்கின்றேன். அது பொதுமக்கள் சேவையாகும். அதனை தடுப்பதற்கு ஜனாதிபதிக்கு மாத்திரமல்ல. வேறு எவருக்கும் உரிமை இல்லை. அதற்கு நான் இடமளிக்கவும் போவதில்லை என்றார்.
No comments:
Post a Comment