வவுனியா தோணிக்கல் தம்பதி படுகொலை சந்தேகநபர்கள் ஐவர் கைது : 24 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு : ஏரியில் வீசப்பட்ட 3 வாள்கள், கோடரி - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 1, 2023

வவுனியா தோணிக்கல் தம்பதி படுகொலை சந்தேகநபர்கள் ஐவர் கைது : 24 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு : ஏரியில் வீசப்பட்ட 3 வாள்கள், கோடரி

வவுனியா தோணிக்கல் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களையும் 24 மணி நேரம் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து சிஐடி விசாரணை மேற்கொள்ள வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் சுபாசினி தேவராசா உத்தரவிட்டார்.

வவுனியா - தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் கடந்த 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புகுந்த குழுவொன்று, வீட்டு உரிமையாளர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தியதுடன் பெற்றோல் ஊற்றி வீட்டிற்கும் தீயிட்டிருந்தது.

இச்சம்பவத்தில் மூச்சுதிணறல் காரணமாக வீட்டில் இருந்த பாத்திமா சமீமா என்ற 21 வயது இளம் குடும்ப பெண் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததுடன் மேலும் 10 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அதில் கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த இறந்த பெண்ணின் கணவனான ச. சுகந்தன் என்பவர் சிகிச்சை பலனின்றி கடந்த 26ஆம் திகதி உயிரிழந்திருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் இராசாயன பகுப்பாய்வாளர்கள், தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் வவுனியா பிரிவு பொலிசார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வந்ததுடன், பலரிடம் வாக்கு மூலங்களும் பெறப்பட்டிருந்தன.

விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேரை வவுனியா பிரிவிற்கான குற்றத் தடுப்பு பொலிசார் நேற்று (31) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களும் வவுனியா பம்பைமடு, தவசிக்குளம், நெளுக்குளம், சிவபுரம் பிரதேசங்களைச் சேர்ந்த 24, 27, 31, 33 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதல் பல நாட்களாக திட்டமிடப்பட்டதாகவும், தாக்குதலுக்காக கொண்டு வரப்பட்ட 3 வாள்கள் மற்றும் ஒரு கோடரி உள்ளிட்டவை அப்பகுதியில் உள்ள ஏரியில் வீசப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சந்தேகநபர்கள் பயன்படுத்திய மூன்று மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

வவுனியா மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர், வவுனியா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவினர் உள்ளிட்ட பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களையும் வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் சுபாசினி தேவராசாவின் இல்லத்தில் பொலிஸார் இன்று (01) மாலை ஆஜர்படுத்தியமையுடன் சந்தேகநபர்களை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க நீதவானிடம் அனுமதி கோரியிருந்தனர்.

இதன்போது 24 மணி நேரம் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் சட்டத்தரணி அருள்மொழிவர்மன் கொன்சியஸ் ஆஜராகி சந்தேகநபர்களை எவ்வித துன்புறுத்தலுக்கும் உள்ளாக்காமல் விசாரணைகளை முன்னெடுக்குமாறு சந்தேகநபர்களின் நலனுரித்துகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் சந்தேகநபர்கள் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவார்கள் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட 5 சந்தேகநபர்களும் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள், பொலிஸ் மாஅதிபரின் உத்தரவுக்கமைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வவுனியா விசேட நிருபர்

No comments:

Post a Comment