மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்துவதே பொருத்தமானது : சாத்தியமற்ற நிபந்தனைகளை முன்வைத்தால் 13 ஐ இழக்க நேரிடும் - கலாநிதி தயான் ஜயதிலக்க - News View

About Us

About Us

Breaking

Sunday, August 6, 2023

மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்துவதே பொருத்தமானது : சாத்தியமற்ற நிபந்தனைகளை முன்வைத்தால் 13 ஐ இழக்க நேரிடும் - கலாநிதி தயான் ஜயதிலக்க

ஆர்.ராம்

தற்போது அரசியலில் உள்ள தென்னிலங்கை முற்போக்கு சக்திகளும் எதிர்க்கட்சிகளும் வடக்கு, கிழக்கு அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஆண்டு இறுதிக்குள் மாகாணங்களுக்கான தேர்தலை நடத்துமாறு ஏகோபித்த கோரிக்கை விடுப்பதே பொருத்தமான நடைமுறையாகும். தவிர்த்து நடைமுறைச் சாத்தியமற்ற நிபந்தனைகளை முன்வைப்பது 13ஆவது திருத்தச் சட்டத்தின் உள்ளீடுகளை இழக்கும் நிலைமைகளை உருவாக்கும் என்று இராஜதந்திரியும் அரசியல் விமர்சகருமான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியாவுக்கான விஜயம், சர்வ ட்சி மாநாடு, அத்துடன் 13ஆவது திருத்த சட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரத்தை நீக்குவதற்கான தனி நபர் அரசியலமைப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை ஆகிய தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த விடயங்கள் சம்பந்தமாக மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் நீண்ட வரலாற்றை கொண்டுள்ள தேசிய பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் கடந்த கால ஜனாதிபதிகள் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறார்கள். ஆனால், அவை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டதாக இல்லை.

இவ்வாறானதொரு சூழலில் தற்பொழுது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அறிவித்திருக்கிறார். உண்மையில் தற்போதுள்ள யதார்த்த நிலைமையை புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலமானது ஜனாதிபதித் தேர்தல் ஒன்றுக்கு முன்னதான வருடமாகும். அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் வருடமாகும். ஆகவே, இந்த காலப்பகுதிகளில் பிரதானமான விடயங்களை முன்நகர்த்துவதும் நடைமுறை சாத்தியமாகுவதும் மிகவும் கடினமான விடயமாகும்.

இவ்வாறான நிலையில் வட, கிழக்கு தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள் உட்பட எதிர்க்கட்சிகள் நடைமுறை சாத்தியமான விடயத்தை வலியுறுத்துவது பொருத்தமானதாகும். அந்த வகையில் தற்போதைய அரசியல் சூழலையும் புரிந்துகொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்கள் ஆணை பெற்று அதிகாரத்தில் உள்ள ஒருவர் அல்ல. அவர் தனி நபராக கூட மக்கள் ஆணை பெற்று பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருக்கும் நபரும் அல்ல. அவ்விதமான நிலையில் அவரால் பிரதானமான விடயங்களை முன்னெடுப்பது சாத்தியமற்றதொன்றாகும்.

ஆதனடிப்படையில் அவர் இந்தியாவிற்கான விஜயத்தை நிறைவு செய்துள்ளார். இந்த விஜயத்தின்போது திருகோணமலை நகரத்தை மையப்படுத்திய அபிவிருத்தி திட்டங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனைவிட தமிழ் நாட்டையும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்குரிய முதற்கட்ட நடவடிக்கைகளுக்கும் இணக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இப்பின்னணியில் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அவர் நடவடிக்கைகளை எடுப்பாராக இருந்தால் நிச்சயமாக தென்னிலங்கையில் அது பெரும் எதிர்ப்பு பிரசாரத்திற்கு வித்திடும்.

அதுமட்டுமன்றி ஜனாதிபதி ரணில் அடுத்த தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பினைக் கொண்டிருக்கையில் சவால்கள் அதிகமுள்ள விவகாரத்தினை முழுமையாக முன்னெடுக்க முனைவது தனது வாக்கு வங்கி அரசிலுக்கு பின்னடைவாக அமையும் என்பதிலும் கவனத்தைக் கொண்டிருப்பார்.

ஆகவே தற்போதைய சூழலில் நடைமுறைச் சாத்தியமான விடயத்தை முன்வைப்பதே பொருத்தமான அணுகு முறையாகும். குறிப்பாக மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் சம்பந்தமாக நிபந்தனைகள் விதிப்பதை விடுத்து அவற்றுக்கான தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதியை வலியுறுத்துவதே பொருத்தமனதாணகம்.

மாகாணங்களுக்குரிய மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்குரிய வழியை முதலில் உறுதிப்படுத்திக் கொள்வதோடு இந்த ஆண்டு உறுதிக்குள் தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சிகள் தென்னிலங்கை முற்போக்கு சக்திகள் மற்றும் வட, கிழக்கு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து அழுத்தங்களை பிரயோகித்து அதில் வெற்றியடைவதே பொருத்தமான அணுகுமுறையாக இருக்கும்.

அதனை விடுத்து காணி, பொலிஸ் அதிகாரங்கள் சம்பந்தமாக நிபந்தனைகளை விதிப்பதும் 13 க்கு அப்பால் செல்வது பற்றி உரையாடுவதும் இருப்பதையும் பறி கொடுப்பதற்கான நிலைமைகளையே தோற்றுவிக்கும்.

தற்போது 13ஆவது திருத்தச் சட்டத்தில் காணப்படும் பொலிஸ் அதிகாரத்தை நீக்குமாறு அரசியலமைப்புத் திருத்த தனி நபர் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. இத்தனி நபர் பிரேரணை சம்பந்தமாக பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும் தமிழ் அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக பொலிஸ், காணி அதிகாரம், சமஷ்டி கோரிக்கை என்பவற்றை முன்வைத்துச் செல்வதானது தென்னிலங்கையில் உள்ள எதிர்ப்புச்சக்திகள் வலுவடைவதற்கே வழிசமைக்கும்.

அந்த நிலைமையானது, சில அரசியல் சக்திகள் ஒன்றிணைந்து 13 இல் உள்ள பொலிஸ் அதிகாரம் உள்ளிட்டவற்றை பாராளுமன்றத்தின் ஊடாக நீக்குவதற்கான சூழலைக்கூட உருவாக்கி விடும். அவ்விதமான நிலைமை ஏற்படுமாயின் அதிகாரப் பகிர்வுக்கான அடிப்படை விடயங்களையே இழக்க நேரிடும். அதனை மையப்படுத்தியே இந்த விடயத்தில் நகர்வுகளைச் செய்வதே முக்கியமானதாகும் என்றார்.

No comments:

Post a Comment