சட்டவிரோதமான முறையில் சேர்க்கப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்கும் அதிகாரம் புதிதாக கொண்டுவரப்படவுள்ள ஊழல் எதிர்ப்பு சட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதாக, நீதி அமைச்சர் விஜேயதாஷ ராஜபக்ஷ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதனை ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு மற்றும் நீதிமன்றம் என்பவற்றுக்கு வழங்கும் வழிமுறைகள் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அமையவே ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கம் தயாரித்துள்ளதாக குறிப்பிடுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் ஆரம்பப் பணிகள் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை சமர்ப்பித்து அமைச்சரவை அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது.
2018 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையிலிருந்து, நான் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்துக்கான பணிகள் இடைநிறுத்தப்பட்டன. கால மாற்றத்தைத் தொடர்ந்து மீண்டும் அந்தப் பணிகள் என்னிடம் வந்து சேர்ந்துள்ளன.
நாட்டின் வங்குரோத்து நிலைக்கு ஊழல் மோசடிகளே பிரதான காரணமென மக்கள் அழுத்தமாக வலியுறுத்தினர். பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை இயற்ற அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியது. ட்ரான்ஸ்பேரன்சி நிறுவனம், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான நீதியான சமூக அமைப்பு உட்பட பல்வேறு தரப்பினரது ஆலோசனைக்கமையவே ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
தயாரிக்கப்பட்ட சட்டமூலத்தை ஒரு தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தினர். நீதிமன்றம் பல திருத்தங்களை முன்வைத்துள்ளது. மறுபுறம் டிரான்ஸ்பேரன்ஷி நிறுவனம் உட்பட எதிர்க்கட்சிகள் முன்வைத்த யோசனைகளை சட்டமூலத்தில் உள்வாங்கியுள்ளோம். இதற்கமைவாகவே திருத்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் சேர்க்கப்பட்ட சொத்துக்கள் பிற நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தால், அச்சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கும், முறைகேடான முறையில் சேர்க்கப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்குவதற்குமான அதிகாரம் ஸ்தாபிக்கப்படவுள்ள ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவுக்கும், நீதிமன்றங்களுக்கும் வழங்கப்பட உள்ளது. இதற்கேற்ற வகையிலான விதிமுறைகளே சட்டமூல ஏற்பாடுகளில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment