நாங்கள் சர்வதேச நாணய நிதியத்தை குறை கூற மாட்டோம் : தொழிலாளர்களின் வைப்பில் கை வைக்க வேண்டாம் - எதிர்க்கட்சித் தலைவர் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 1, 2023

நாங்கள் சர்வதேச நாணய நிதியத்தை குறை கூற மாட்டோம் : தொழிலாளர்களின் வைப்பில் கை வைக்க வேண்டாம் - எதிர்க்கட்சித் தலைவர்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நாங்கள் சர்வதேச நாயண நிதியத்தை குறை கூற மாட்டோம். அரசாங்கமே முந்திக் கொண்டு இதனை செய்ய முயற்சிக்கிறது. நாட்டின் ஆரம்ப நிலுவையை மரை 7 இல் இருந்து நேர் பெறுமானம் 2.3 வரை கொண்டுவருவதே அரசாங்கத்தின் முயற்சியாகும். மக்கள் மீது பாரிய சுமையை ஏற்டுத்தியே அரசாங்கம் இதனை மேற்கொள்ளப்போகிறது என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (01) இடம்பெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தின் அனுமதியை பெற்றுக் கொள்வதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு மேற்கொள்வதில்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோர் தொடர்ந்து தெரிவித்து வந்தனர்.

அதேபோன்று ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்திலும் கை வைப்பதில்லை என்றே தெரிவித்து வந்தனர். நாட்டின் பொருளாதார நெருக்கடியை போக்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்லுமாறு நாங்கள் தெரிவித்தோம்.

அது சரி என இன்றும் தெரிவிக்கிறோம். ஆனால் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் பிழை. உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளுமாறு நாணய நிதியம் தெரிவிக்கவில்லை. அரசாங்கத்தின் தேவைக்கே இது செய்யப்படுகிறது.

ஏனெனில், அரசாங்கம் குறுகிய காலத்தில் நாட்டின் ஆரம்ப நிலுவையை மரை 7 இல் இருந்து நேர் பெறுமானம் 2.3 வரை கொண்டுவருவதே அரசாங்கத்தின் முயற்சியாகும். இது செய்ய முடியுமானதா என கேட்கிறேன். யதார்த்தமான தீர்மானம் அல்ல. மக்கள் மீது பாரிய சுமையை ஏற்டுத்தியே அரசாங்கம் இதனை மேற்கொள்ளப்போகிறது.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தேவையில்லை என்பதே எனது நிலைப்பாடு. உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளாமல் சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டுக்கு வந்த பல நாடுகள் இருக்கின்றன. அதேபோன்று வங்குரோத்து அடைந்த ஐவரிகோஸ்ட், ஈராக் மற்றும் ஈக்வடோர் போன்ற நாடுகளும் உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கு செல்லாமல் இருப்பதற்கு நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டை பெற்றுக் கொண்டிருந்தன.

அதனால், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நாங்கள் நாணய நிதியத்தை குற்றம் சொல்ல முற்படுவதில்லை. நாணய நிதியம் இதனை செய்யுமாறு தெரிவிக்கவில்லை. ஆனால் அரசாங்கமே முந்திக்கொண்டு இதனை செய்யவதாக தெரிவித்திருக்கிறது. அதனால் எமது அரசாங்கத்தில் இந்த நிபந்தனைகளை இலகுபடுத்திக் கொள்ள நாங்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடுவோம்.

கடன் மறுசீரமைப்பின்போது அரசாங்கம் தேசிய கடனாளிகளுக்கு எந்த சலுகையும் வழங்காமல் வெளிநாட்டு கடளாளிகளுக்கு சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதனால்தான் இதனை நாங்கள் எதிர்க்கிறோம்.

எனவே, அரசாங்கம் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் மூலம் தனவந்தர்களுக்கு சலுகைகளை வழங்கி தொழிலாளர்களின் வைப்பில் கை வைக்க முயற்சிக்கிறது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால் கடன் மறுசீரமைப்பு மேற்கொள்வதாக இருந்தால் அனைத்து தரப்பினருக்கும் ஒரேமாதிரியான சலுகைகளை வழங்க வேண்டும். அத்துடன் தொழிலாளர்களின் வைப்பில் கைவைக்கக் கூடாது என அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment