மகாராஷ்டிராவில் உள்ள பால்கர் ரயில் நிலையம் அருகே, இன்று (31) அதிகாலை 5 மணியளவில் ரயிலில் பயணித்த ரயில்வே பாதுகாப்பு படை (RPF) அதிகாரி ஒருவர், பொலிஸ் உதவி பரிசோதகர் உட்பட நான்கு பேரை சுட்டுக் கொன்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜெய்ப்பூரில் இருந்து மும்பைக்கு வந்து கொண்டிருந்த, ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் (12956) ரயிலில் , RPF கான்ஸ்டபிள் சேத்தன் சிங் என்பவர், தனது துப்பாக்கியால் சுட்டதில், மற்றொரு RPF சக ஊழியரும், மூன்று பயணிகளும் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ், மும்பையிலிருந்து 100 கிமீ தொலைவில் உள்ள பால்கர் ஸ்டேஷனைக் கடந்ததும் இந்த துப்பாக்கி சூடு நடந்தது என்றும், தொடர்ந்து ஆயுதங்களுடன் சேத்தன் சிங் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தனர்.
முதல்கட்ட தகவலின்படி, ஆர்பிஎஃப் கான்ஸ்டபிள் சேத்தன் சிங்க்கும், அவருடன் பயணித்த பொலிஸ் உதவி பரிசோதகருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அவர்களை சமாதானம் செய்ய சக பயணிகள் முயன்ற சமயத்தில் கான்ஸ்டபிள் சேத்தன் சிங் துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்றும் சொல்லப்படுகிறது. துப்பாக்கியால் சுட்டத்தில் சம்பவத்தில் பொலிஸ் உதவி பரிசோதகர் உட்பட நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
நான்கு பேரை சுட்டுக் கொன்றுவிட்டு கான்ஸ்டபிள் சேத்தன் சிங் தாஹிசார் ஸ்டேஷன் அருகே ரயிலில் இருந்து குதித்து தப்பிச் சென்றுள்ளார். எனினும் அவரை விரைவாகவே ரயில்வே பொலிஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment