நாட்டில் சுமார் 50,000 ஐஸ் போதைப் பொருள் பாவனையாளர்கள் : புகையிலை பாவனை ஆரம்பத்தில் தடுக்கப்பட வேண்டிய ஒன்று - News View

About Us

About Us

Breaking

Monday, July 31, 2023

நாட்டில் சுமார் 50,000 ஐஸ் போதைப் பொருள் பாவனையாளர்கள் : புகையிலை பாவனை ஆரம்பத்தில் தடுக்கப்பட வேண்டிய ஒன்று

(எம்.மனோசித்ரா)

ஐஸ் போதைப் பொருள் (மெத்தம்பேட்டமைன்) பயன்பாடு குறித்த தேசிய கணக்கெடுப்பின் ஆரம்பக் கண்டுபிடிப்புகளின்படி, நாட்டில் சுமார் 50,000 பேர் அதனைப் பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய அபாய மருந்துகள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் ஷக்ய நாணயக்கார தெரிவித்தார்.

தேசிய அபாய மருந்துகள் கட்டுப்பாட்டு சபை கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை (31) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையில் தற்போது சுமார் 50000 பேர் ஐஸ் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளமை தெரியவந்துள்ளது. எனினும் பாடசாலை மட்டத்தில் இதன் பாவனை மிகக் குறைவாகவே காணப்படுகிறது.

கடந்த 6 மாத காலப்பகுதியில் பாடசாலை மாணவர்களில் எவரும் ஐஸ் போதைப் பொருள் பாவித்தமை தொடர்பில் கைது செய்யப்படவில்லை.

அதேபோன்று அபாயகரமாக ஒளடத கட்டுப்பாட்டு சபையின் கீழ் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கான 4 புனர்வாழ்வு நிலையங்கள் காணப்படுகின்றன.

கடந்த ஆண்டு நிலைவரத்தின்படி ஐஸ் பாவனையால் புனர்வாழ்வளிப்பு நிலையங்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. எனினும் இவ்வாண்டு அந்த எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து செல்கின்றது.

எவ்வாறிருப்பினும் பாடசாலைகளில் புகையிலை பாவனை அதிகமாகக் காணப்படுகின்றமை இனங்காணப்பட்டுள்ளது. புகைப்பிடித்தல், புகையிலை உண்ணல் பழக்கம் கொண்ட 30 இலட்சம் பேர் நாட்டில் காணப்படுகின்றனர்.

இந்த புகையிலை அல்லது புகைத்தல் பழக்கமே, எதிர்காலத்தில் அவர்களை ஹெரோயின், கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் பாவனைக்கு தூண்டுகின்றது. எனவே புகையிலை பாவனையும் ஆரம்பத்திலிருந்தே தடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும் என்றார்.

No comments:

Post a Comment