சர்வதேச பல்கலைக்கழகங்களை இலங்கையில் திறக்க பேச்சு : கல்விக்காக மட்டும் 250 பில்லியன் ரூபா ஒதுக்கப்படுகிறது : மாணவர்களின் செயற்பாடுகள் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன - கலாநிதி சுரேன் ராகவன் - News View

About Us

About Us

Breaking

Friday, July 14, 2023

சர்வதேச பல்கலைக்கழகங்களை இலங்கையில் திறக்க பேச்சு : கல்விக்காக மட்டும் 250 பில்லியன் ரூபா ஒதுக்கப்படுகிறது : மாணவர்களின் செயற்பாடுகள் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன - கலாநிதி சுரேன் ராகவன்

2030ஆம் ஆண்டில் சர்வதேச தரத்திலான மாணவர்களை உருவாக்கும் வகையிலும், புத்தாக்க அடிப்படையிலும், எதிர்காலப் பிரச்சினைகளை அடையாளம் கண்டு தூரநோக்குடன் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் மாணவர்களை உருவாக்கும் வகையிலும் இலங்கையின் பல்கலைக்கழக கல்வி முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என்றும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.

சர்வதேச தரத்திற்கு உள்ளூர் பல்கலைக்கழகங்களை தரமுயர்த்த வேண்டும் என்பதுடன், 2030ஆம் ஆண்டளவில் பிராந்தியத்தில் சிறந்த பல்கலைக்கழகங்களாக இலங்கைப் பல்கலைக்கழகங்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

இதற்கான கல்வி மறுசீரமைப்பு, கொள்கை உருவாக்கம் குறித்து பேச்சு நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சர்வதேச பல்கலைக்கழகங்கள் சிலவற்றை இலங்கையில் திறப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், முதற்கட்டமாக இவற்றில் இரண்டு அல்லது மூன்று பல்கலைக்கழகங்களை திறக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிராந்தியத்தில் சிறந்த உயர் கல்வியை வழங்கும் மையமாக இலங்கையை மாற்ற வேண்டும் என்றும், இதன்மூலம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள மாணவர்களை இலங்கைக்கு ஈர்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (14) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும் போதே உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன், ”இலங்கையில் உயர் கல்வி மறுசீரமைப்பு மற்றும் இதற்கான கொள்கை உருவாக்கம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. 17 அரச பல்கலைக்கழங்கள் இருக்கின்றன. 102 வருடம் பழமையான கொழும்பு பல்கலைக்கழகமும் மூன்று வருடங்கள் மட்டுமேயான வவுனியா பல்கலைக்கழகமும் இவற்றுள் அடங்கும். 

பட்ஜட்டில் உயர் கல்விக்கு 75 பில்லியன் ரூபா உட்பட 250 பில்லியன் ரூபா கல்விக்காக மட்டும் ஒதுக்கப்படுகிறது. இந்தப் பல்கலைக்கழங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்த வேண்டியுள்ளது. குறைந்தபட்சம் 2030ஆம் ஆண்டு பிராந்தியத்தில் சிறந்த பல்கலைக்கழங்களாக தரமுயர்த்த வேண்டும். 

பிராந்தியத்தில் சிறந்த கல்வி மையமாக இலங்கையை உருவாக்குவதற்கான திட்டம் இருக்கிறது. தமிழ் நாடு, கேளரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கான ஆகிய மாநிலங்களில் உள்ள மாணவர்கள் டெல்லிக்குச் செல்வதைவிட இலங்கையில் உயர் கல்வியை மேற்கொள்வது இலகுவாக இருக்கும். கல்வி, கலாசாரம் அனைத்தும் ஒன்றாகவே இருக்கிறது. இந்த மாநிலங்களில் 2030ஆம் ஆண்டு 3.5 பில்லியன் சனத் தொகை இருக்கும். அங்கு பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. இந்த சந்தையை இலக்கு வைத்துள்ளோம். அங்குள்ள மாணவர்களை ஈர்க்கும் வகையில் உயர் கல்வித் துறையை மேம்படுத்த வேண்டும். 

சர்வதேச பல்கலைக்கழங்களில் சிலவற்றை இலங்கையில் திறப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக இதில் இரண்டு அல்லது மூன்று பல்கலைக்கழகங்களை விரைவில் இலங்கையில் ஸ்தாபிக்க முடியும் என்று நம்புகிறோம். 

இலங்கையில் அனைத்து மாணவர்களுக்கும் உயர் கல்வி பெற்றுக் கொடுக்கும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. அது அரச கல்வியா, தனியார் கல்வியா, பட்டப்படிப்பா, தொழில்நுட்பக் கல்வியா என்ற தீர்மானத்திற்கு பின்னர் வரலாம். எனினும், அடிப்படை மனித உரிமையான கல்வியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். ஜனாதிபதி இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார். ஆனால் இதில் பெரும் சவால்கள் இருக்கின்றன. 

இந்த நாட்டிற்கு இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டபோது சுமார் 6 மில்லியன் மக்கள் தொகையில் 4 லட்சம் மாணவர்களே இருந்தனர். ஆனால் இன்று 4.3 மில்லியன் மாணவர்கள் இருக்கின்றனர். 

சுதந்திரம் பெறும்போது டொலரின் பெறுமதி 2 ரூபா 10 சதமாக இருந்தது. தற்போதிருக்கும் டொலரின் பெறுமதியைப் பாருங்கள். எமது பொருளாதாரம் சுருங்கிச் சென்ற போதிலும் கல்வித் துறையின் கேள்வி அதிகரித்துள்ளது. இந்த இடைவெளியினால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். 2030ஆம் ஆண்டு போகும் சர்வதேசத்துடன் போட்டிப் போடக் கூடிய மாணவர்களை உருவாக்க வேண்டும்.

கல்வித் துறையில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. பல தொழிற்சங்கள் இருக்கின்றன. பல மாணவச் சங்கங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு கல்வி குறித்தும், உலகு குறித்தும் வேறுபட்ட கண்ணோட்டம் இருக்கிறது. எனினும் பேச்சுவார்த்தையின் மூலம் இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம். இந்த நிலையில்தான் கல்வி முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளது. 

இலங்கையில் மாற்றத்தைக் கொண்டுவருவது மிகக் கடினமானது. பல கோணங்களில் அவற்றைப் பார்க்கின்றனர். இவர்கள் அனைவருடனும் இணைந்தே இந்த மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். நாட்டில் சமீபத்தில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கூடியவர்களும், எதிர்காலப் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, தொலைநோக்குப் பார்வையுடன் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடியவர்களும் பல்கலைக்கழகங்களில் உருவாக்கப்பட வேண்டும். வெளிநாடு வாழ் இலங்கையர்கள் அல்லது வெளிநாடு வாழ் இலங்கை வம்சாவளியில் உள்ள நிபுணர்களுடன் பேச்சு நடத்தி வருகிறோம்.

வெளிநாடுகளில் பல்கலைக்கழகங்களில் விரிவுரை வழங்கும் பேராசிரியர்களுடன் பேச்சு நடத்தியுள்ளோம்.

விடுமுறைக் காலங்களில் இலங்கையில் விரிவுரைகளை வழங்க இவர்களை அழைத்துவர முடியும். அவர்களுக்கு வெளிநாடுகளில் வழங்கும் கொடுப்பனவுகளை வழங்க முடியாவிட்டாலும், அவர்களுக்கான சலுகைகளை வழங்க முடியும். இதன் மூலம் சர்வதேச தரத்திற்கு எமது பல்கலைக்கழக விரிவுரைகளை தரமுயர்த்த முடியும்.” என்று தெரிவித்தார்.

இங்கு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், ”பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடுகள் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன. நூலகங்கள் வேண்டும், வெளிநாட்டு விரிவுரையாளர்கள் வேண்டும் என்று பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்துவதில்லை. அவர்கள் ஐ.எம்.எவ். வேண்டாம். ரணிலை வீட்டுக்கு அனுப்புவோம் என்ற கோசங்களுடன் போராடுகின்றனர். 

கல்வி துறை சார் பிரச்சினைகளை முன்வைத்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறேன். ஆனால் அவர்கள் அரசியல் மயப்பட்டிருக்கின்றனர். மாணவர் தங்குமிடங்களில் சிலர் 13 வருடங்களாக தங்கியுள்ளனர். 4 வருடங்களில் பட்டம் பெற வேண்டியவர்கள் 8 வருடங்களாக அதனைப் பூர்த்தி செய்யாமல் இருக்கின்றனர். இவை குறித்து கேள்வியெழுப்ப வேண்டும். 

2030 - 2035 காலப்பகுதிக்குள் சர்வதேச தரத்திற்கு இலங்கையின் பல்கலைக்கழகங்களை தரமுயர்த்த எதிர்பார்த்துள்ளோம். சர்வதேச தரவரிசயைில் எமது பல்கலைக்கழங்களை தேடிப் பாருங்கள். முதலில் பிராந்திய ரீதியில் இலங்கைப் பல்கலைக்கழகங்கள் சிறந்த பல்கலைக்கழகம் என்ற இடத்திற்கு வர வேண்டும். 

உயர் கல்வி தனியார் துறை வகுப்புக்களின் சந்தை மட்டும் 65 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இதற்கான பொது ஒழுங்குபடுத்தல் எதுவும் இல்லை. ஆனால், தனியார் கல்வி ஆசிரியர்கள் அவர்கள் சுயமாகவே தங்களுக்கான ஒழுங்குபடுத்தல்களை உருவாக்க வேண்டும்.

சுமார் 50 ஆயிரம் ஆசிரியர்கள் தனியார் வகுப்புக்களை நடத்துகின்றனர். இவர்களில் முழுநேர, பகுதி நேர ஆசிரியர்கள் இருக்கின்றனர். ஆனால் எவ்வித ஒழுங்குபடுத்தலும் இல்லை. இதனையும் ஒழுக்குபடுத்த வேண்டியுள்ளது. ஆனால் இதில் அரசு தலையிடத் தேவையில்லை. தனியார் வகுப்பு ஆசிரியர்களும், பெற்றோரும், மாணவர்களும் இந்நாட்டின் பிரஜைகள். எனவே, அவர்களே அதனை ஒழுங்குப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இது குறித்து பேச்சுநடத்தி, சரியான தீர்மானத்திற்கு வரவேண்டும்.” என்று உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment