ஊழல் எதிர்ப்பு சட்டம் நேற்று பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. உத்தேச ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் பல விடயங்கள் திருத்தம் செய்யப்பட்டதுடன் மேலும் பல திருத்தங்கள் சேர்க்கப்பட்டன. இதற்கான குழுநிலையை எதிர்வரும் (19) முன்னெடுப்பதற்கு நேற்றையதினம் தீர்மானிக்கப்பட்டது.
இச்சட்டமூலத்தை எதிர்வரும் (19) நிறைவேற்றுவதற்கு சபையில் நேற்று தீர்மானிக்கப்பட்டபோதும், நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷவின் இணக்கப்பாட்டுக்கிணங்க நேற்று அந்த சட்ட மூலம் சபையில் நிறைவேற்றப்பட்டது.
எனினும், இதற்கான திருத்தங்கள் எதிர்வரும் (19) பாராளுமன்ற அமர்வில் குழுநிலை வேளையில், மேற்கொள்ளப்படுமென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன சபைக்கு அறிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் மீதான இரண்டாம் நாள் விவாதம் நடைபெற்றது.
உத்தேச ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முதலாவது திருத்த யோசனையில் சட்ட வரைபின் 28 பக்கங்கள், திருத்தம் செய்யப்பட வேண்டும். அதேபோல் இரண்டாவது திருத்த யோசனையிலும் பல விடயங்கள் திருத்தம் செய்யப்பட வேண்டுமென விவாதத்தின் இறுதியில் சபை முதல்வர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.
சபை முதல்வரின் இந்த நிலைப்பாட்டை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி பிரதம கொரடா லக்க்ஷமன் கிரியெல்ல சட்டமூலத்தை நிறைவேற்றாமல் தொடர்ந்து இழுபறி நிலைக்கு அரசாங்கம் கொண்டு செல்வதாக குற்றம் சாட்டினார்.
ஆகவே, உத்தேச ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவேற்றி அதன் பின்னர் திருத்தங்களை முன்வைக்கலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த சபாநாயகர், சபை முதல்வர் முன்வைத்த யோசனைக்கு சபை இணக்கமா என வினவினார்.
இதன்போது குறிப்பிட்ட சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த உத்தேச ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அதன் திருத்தங்களை எதிர்வரும் (19) குழுநிலையில் திருத்தங்களை மேற்கொள்வோம் என்றார்.
இதற்கு எதிர்க்கட்சிகள் இணக்கம் தெரிவித்ததை தொடர்ந்து, உத்தேச ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் அறிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment