(லியோ நிரோஷ தர்ஷன்)
2024 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் குறித்து தீர்மானியுங்கள். அதுவரையில் அதிகாரப்பகிர்வு குறித்து பேசுவதற்கு மக்கள் ஆணை கிடையாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உயர்பீடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தகவல் அனுப்பியுள்ளது.
சர்வ கட்சி மாநாட்டிற்கான ஜனாதிபதியின் அழைப்பை தொடர்ந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உயர்பீடம் முன்னாள் நிதி அமைச்சர் பெஷில் ராஜபக்ஷ தலைமையில் கூடியது.
இதன்போது 13 ஆவது திருத்தம் குறித்தும் அதிகாரப்பகிர்வு குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வ கட்சி மாநாட்டை கூட்டி பேசுவது முறையல்ல என்ற விடயத்தை முக்கிய உறுப்பினர்கள் எடுத்துரைத்துள்ளனர்.
ஏனெனில் 69 இலட்சம் பெரும்பான்மையைக் கொண்ட உண்மையான மக்கள் ஆணை பொதுஜன பெரமுனவுக்கே உள்ளது.
கோட்டபாய ராஜபக்ஷவை முன்னிறுத்திய கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் 'சௌபாக்ய தெக்ம' என்ற கொள்கைத் திட்டத்தில் 13 ஆவது திருத்தம் குறித்து எந்தவொரு உறுதிமொழியோ இல்லை. கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியை துறந்துள்ள நிலையில் அவருடைய பதவிக் காலத்தின் எஞ்சிய காலத்திற்கான ஜனாதிபதியாகவே ரணில் விக்ரமசிங்க உள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்றும் பொதுஜன பெரமுனவே பெரும்பான்மையை கொண்ட கட்சியாக உள்ளது.
எனவே கொள்கைக்கு எதிராக தீர்மானிக்க தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இயலாது என்ற விடயத்தை தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பஷில் ராஜபக்ஷவிடம் எடுத்துரைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பொதுஜன பெரமுனவின் இறுதித் தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அஸ்கிரி மற்றும் மல்வத்து உட்பட ஏனைய உயர் பௌத்த பீடங்களுக்கும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment