(எம்.ஆர்.எம்.வசீம்)
2022ஆம் ஆண்டு முதல் இதுவரையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற மருந்துப் பொருட்கள் தொடர்பாக ஆராய்வதற்காக 15 பேர் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் சுகாதார அமைச்சுக்கு எதிராக கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகளுக்கமைய கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பீ.சி. விக்ரமரத்ன இந்த குழுவை நியமித்துள்ளார்.
சுகாதார அமைச்சு வைத்திய விநியோகப் பிரிவு, மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, மருந்து உற்பத்திகள் ஆணைக்குழு, கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் நாட்டின் ஏனைய பிரதான வைத்தியசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வைத்தியர்களே இந்த குழுவின் அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தரமற்ற மற்றும் பதிவு செய்யப்படாமல் மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றுக்கு எதிராக தெரிவிக்கப்படுள்ள முறைப்பாடுகளை கருத்திற் கொண்டு இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்தார்.
இதேவேளை, மருந்து கொள்வனவு மற்றும் விநியோகம் தொடர்பான கணினி கட்டமைப்பு தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விசாரணைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்தார்.
இரண்டு மாத காலத்துக்குள் இந்த விசாரணை அறிக்கை பாராளுமன்றத்துக்கும் கையளிக்கப்படவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment