யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு நான்கு விண்ணப்பங்கள் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 4, 2023

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு நான்கு விண்ணப்பங்கள்

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டதற்கிணங்க, நான்கு விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர்கள் மூவரும், கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவருமாக நான்கு பேர் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக பதவி வகிக்கின்ற - பதவிக்கால நிறைவை நெருங்கிக் கொண்டிருக்கின்ற பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மீண்டும் அதே பதவிக்காக விண்ணப்பித்துள்ளார்.

அவரைத் தவிர, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து மேலும் இருவர் இப்பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் செ. கண்ணதாசன், முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் தி. வேல்நம்பி ஆகியோரே ஆவர்.

அத்துடன், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இருந்து விலங்கியல் துறைப் பேராசிரியர் பி. வினோபாபா விண்ணப்பித்துள்ளார்.

தற்போதைய யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் பதவிக்காலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

இதனால், புதிய துணைவேந்தரை நியமிக்கும் நோக்கில் பல்கலைக்கழகப் பேரவையின் பதவி வழிச் செயலாளரான பதிவாளரால் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால அவகாசம் கடந்த வெள்ளிக்கிழமை (2) பிற்பகல் 3 மணியோடு நிறைவடைந்திருந்தது. அறிவிக்கப்பட்டிருந்த இந்த கால இடைவெளியிலேயே இந்த நான்கு விண்ணப்பங்களும் அனுப்பப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கைக்கு அமைய, எதிர்வரும் ஜூலை மாதத்தின் முற்பகுதியில் நடத்தப்படவுள்ள விசேட பேரவைக் கூட்டத்தில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படும் நிபுணர் ஒருவரின் முன்னிலையிலேயே தெரிவுக்கான புள்ளிகள் வழங்கப்பட்டு, அப்புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களின் விபரங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றினூடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.

அதனையடுத்து, பல்கலைக்கழக சட்டத்தின்படி, ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில், பேரவையினால் முன்மொழியப்பட்ட மூவரில் இருந்து ஒருவரை தெரிவுசெய்து, யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தராக ஜனாதிபதி நியமிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment