31 மாணவர்களுக்கு உள்நுழைவுத் தடை விதித்தது யாழ். பல்கலைக்கழகம் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 4, 2023

31 மாணவர்களுக்கு உள்நுழைவுத் தடை விதித்தது யாழ். பல்கலைக்கழகம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் 31 மாணவர்களுக்கு உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட இரண்டாம் வருட மாணவர்கள் 16 பேருக்கும், மூன்றாம் வருட மாணவர்கள் 15 பேருக்கும் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும், விடுதி உட்பட பல்கலைக் கழகத்தின் எந்தவொரு பகுதியினுள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்களின் “மாகோஸ்” வார நிகழ்வுகள் கடந்த 31 ஆம் திகதி புதன்கிழமை முதல் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரண்டாம் வருட மாணவர்களுக்கும், மூன்றாம் வருட மாணவர்களுக்கும் இடையில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வில் ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறி மோதலில் முடிந்தது.

இதனால் மூன்றாம் வருட மாணவன் ஒருவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பிலான பூர்வாங்க விசாரணைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

விசாரணைகளின் முடிவில் சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட இரண்டாம் வருட மாணவர்கள் 16 பேருக்கும், மூன்றாம் வருட மாணவர்கள் 15 பேருக்கும் முறையான விசாரணைகள் முடிவுறும் வரை உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக் கழக மாணவர் வதிவிடம் மற்றும் ஒழுக்கம் தொடர்பான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விதிமுறைகளுக்கமைவாக இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரை உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்ட மாணவர்கள் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும், விடுதி உட்பட பல்கலைக்கழகத்தின் எந்தவொரு பகுதியினுள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடாதிபதி பேராசிரியர் பா. நிமலதாசன் அறிவித்துள்ளார்.

இதேநேரம், மோதல் சம்பவத்தையடுத்து முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்களின் “மாகோஸ்” வார நிகழ்வுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment