பொறுப்பை ஊடக நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் : அரசாங்கம் தலையிடக்கூடாது என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 21, 2023

பொறுப்பை ஊடக நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் : அரசாங்கம் தலையிடக்கூடாது என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

ஊடக ஒழுங்குபடுத்தும் கொள்கையை தயாரிக்கும் பொறுப்பை ஊடகங்களுக்கே வழங்க வேண்டும். அதில் அரசாங்கம் தலையிடக்கூடாது. அத்துடன் ஊடக நெறிமுறைகள் தொடர்பாக சுய தனிக்கைக்கு செல்ல ஊடகவியலாளர்களுக்கு இடமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) நிலையியற் கட்டளை 27 இன் 2 கீழ் கேள்விகளை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஊடக ஒழுங்குபடுத்தல் இருக்க வேண்டும். அதனை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் ஊடக ஒழுங்குபடுத்தல் கொள்கை தயாரிக்கும் பொறுப்பை ஊடகத் துறைக்கே வழங்க வேண்டும் என்றே நாங்கள் தெரிவிக்கின்றோம். அதில் அரசாங்கம் தலையிடக்கூடாது.

சகல ஊடகங்களுக்கும் ஒரே இடத்தில் தகவல்களை வழங்க தேவையான நடைமுறை கட்டமைக்கப்பட வேண்டும். ஊடகவியலாளர்கள் தகவல்களை தெரிவிக்கும் சுதந்திரம் இருக்க வேண்டும். தகவல் மூலங்களைப் பாதுகாக்க ஊடகங்களுக்கு உரிமையுள்ளது.

இருப்பினும், இலத்திரனியல் ஒளிபரப்பு நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக சில குறிப்பிட்ட சட்டம் இருக்க வேண்டும் என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படும் ஓர் காரணமாகும். என்றாலும் இதற்கான அரசின் தலையீடு வரையறையுடன் கூடிய நிலையில் மேற்கொள்ளப்படுவதாக அமைய வேண்டும்.

கட்டுப்பாடு என்ற பெயரில் அரசை விமர்சிக்கும் ஊடகங்களை ஒடுக்குவது இதன் ஊடாக இடம்பெறக்கூடாது. என்றாலும் தற்பாேது அரசாங்கத்தினால் ஊடகங்களுக்கு பாரபட்சமுறையிலான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறான அழுத்தங்களை அரசாங்கம் நிறுத்த வேண்டும்.

மேலும் ஊடக ஒழுங்குமுறைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணத்தை வைத்து தேவையில்லாமல் ஊடகங்களை கையாள தற்போதைய அரசாங்கம் சில முயற்சிகளை மேற்கொள்வதாகவே தோன்றுகிறது. இது இந்நாட்டின் ஜனநாயகத்தை கடுமையாக பாதிப்பதாக அமையலாம்.

அதனால் சுதந்திரமான ஊடகத்துறையின் அபிவிருத்திக்கான நெறிமுறைகளையும், தொழில்முறை ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதையுமே அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். அதேநேரம் ஊடகவியலாளர்களுக்கு ஊடக நெறிமுறை இருக்க வேண்டும். அந்த நெறிமுறையை ஊடகவியலாளர்கள் சுய தனிக்கை மேற்கொள்ள இடமளிக்க வேண்டும்.

மேலும் தொழில் சட்டத்தின் பிரகாரம் ஊடகவியலாளர்களுக்கான சம்பளம், தொழில் பயிற்சி இல்லாமை போன்ற பல பிரச்சினைகளுக்கு ஊடகவியலாளர்கள் முகம்கொடுத்து வருகின்றனர்.

இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? அரசாங்கம் ஊடகவியலாளர்கள் தொடர்பில் மேற்காள்ள வேண்டிய நடவடிக்கைகள் பல இருக்கும் நிலையில், ஊடகவியலாளர்கள் சுயாதீனமாக கருத்து தெரிவிக்கும் அதிகாரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

அரசாங்கத்தை விமர்சித்து செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர்கள் பாராளுமன்ற சிறப்புரை குழுவுக்கு கொண்டுவந்து விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தனர்.

அதேபோன்று கடந்த காலங்களில் ஊடகவியலாளர்களை கொலை செய்தவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறதா என கேட்கிறேன்.

மேலும் ஊடக நிறுவனங்களுக்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதை முறையான வகையில் வழங்கப்படுவதில்லை. அதனால் அனைத்து ஊடக வலயமைப்புகளுக்கும் பொது நிபந்தனையின் கீழ் ஊடக அனுமதிப்பத்திரம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என கேட்கிறேன்.

அதேநேரம் அரசாங்கம் தயாரித்துள்ள ஊடக அதிகார சபை அமைப்பது தொடர்பான ஆவணம் தொடர்பில் ஊடக பிரதானிகளுடன் கலந்துரையாட நடவடிக்கை எடுக்குமா? எப்போது அதனை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்போகிறது என்பதை அரசாங்கத்திடம் கேட்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment